முட்டாள்கள் தினம் கொண்டாடுவதன் வரலாற்றுப் பின்னனி என்ன?
உலகளாவிய அளவில் கொண்டாடப்படும் முட்டாள்கள் தினத்தின் வரலாற்று பின்னனி என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
பொதுவாக உலகளாவிய அளவில் ஏப்ரல் 1 அன்று உலக முட்டாள்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக சிறுவயதில், ’சைக்கிள் வீல் சுத்துது பாரு, உன் பின்னாடி இங்க் அடிச்சிருக்கு, காலுக்கு அடில பாரு பூச்சி’ என நண்பர்களை ஏமாற்றி சிரித்து இந்த முட்டாள்கள் தினத்தை கொண்டாடுவது வழக்கம். பலரும் அந்த காலக்கட்டத்தை கடந்து தான் வந்து இருப்போம்.
பொதுவாகவே இந்த முட்டாள்கள் தினம் என்பது கி.பி 1500 காலக்கட்டங்களில் இருந்தே கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த காலக்கட்டங்களில் ஐரோப்பிய பகுதிகள் ஏப்ரல் 1 யை மீன்கள் தினமாக கொண்டாடுவார்களாம். அதாவது அந்த சமயத்தில் மீன் பிடிப்பவர்களுக்கு மட்டும் வழக்கமான நாட்களை விட அதிகமான மீன்கள் கிடைக்குமாம், அதனால் மீன்கள் ஏமாறும் தினம், மீன்கள் முட்டாள்களாகி வலைகளில் விழும் தினமாக அனுசரிக்கப்பட்டு இருக்கிறது. நாளடைவில் அது வெறுமனையாக முட்டாள்கள் தினமாக மாறி இருக்கிறது என கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம், பிரான்ஸ் நாட்டின் அரசர் ஒன்பதாவது சார்லஸ் காலத்தில் ஏப்ரல் 1 யை தான் புத்தாண்டாக கொண்டாடுவார்களாம். பின்னர் கிபி 1562 போப் கிரிகோரி காலக்கட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் ஜனவரி 1 ஆக மாற்றப்பட்டது. ஆனாலும் அதற்கு பின்னரும் கூட ஒரு சிலர் ஏப்ரல் 1 தினத்தையே புத்தாண்டாக கொண்டாடினார்களாம். அவர்களை எல்லாம் ஜனவரி 1 அன்று புத்தாண்டு கொண்டாடுபவர்கள் முட்டாள்களாக சித்தரித்தார்களாம். நாளடைவில் அந்த பழைய புத்தாண்டு தினமான ஏப்ரல் 1 யை முட்டாள்கள் தினம் என்றே அறிவித்தார்களாம். இவ்வாறாக முட்டாள்கள் தினம் என்பது உலகெங்கும் பரவி இருக்கிறது.
“ ஒவ்வொரு நாட்டிலும் முட்டாள்கள் தினத்திற்கு ஒவ்வொரு காரணம் கூறப்படுகிறது. ஆனாலும் கூட எந்த காரணமும் இன்றி அன்று நாம் மகிழ்வோடு கொண்டாடிய இந்த தினத்தை திரும்பி பார்க்கும் போது உள்ளத்திற்குள் பூரிப்பு இருக்க தான் செய்கிறது “