உஷார் மக்களே! உஷார்! தொடரும் இன்ஸ்டாகிராம் போட்டோகிராபர் மோசடிகள்!
இன்ஸ்டாகிராமில் பிரபல போட்டோகிராபர்களாக வலம் வரும் ஒரு சிலர் தொடர்ந்து பல பண மோசடிகள் செய்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் தற்போது சமூக வலைதளமாக மட்டும் இல்லாமல், பலருக்கும் அது ஒரு தொழிலை, திறமைகளை விரிவுபடுத்தும் ஒரு மையமாக செயல்பட்டு வருகிறது. ஒரு சிலர் இன்ஸ்டாகிராம் விளம்பர யுக்திகளை பயன்படுத்தி தங்கள் தொழிலை, திறமைகளை விரிவுபடுத்துகின்றனர். இன்னும் பலர் அதே இன்ஸ்டாகிராம் விளம்பர யுக்திகளை பயன்படுத்தி பல்வேறு பண மோசடிகளையும் செய்து வருகின்றனர்.
அதில் ஒன்று தான் இந்த இன்ஸ்டாகிராம் போட்டோகிராபர்கள் மோசடி. அதாவது இவர்கள் என்ன செய்வார்கள் என்றால் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தாங்கள் எடுத்தது போல அழகழகான போட்டோக்களை, வீடியோக்களை பதிவிட்டு அதை விளம்பரப்படுத்தியும் விடுவார்களாம். இவர்கள் பதிவிட்ட போட்டோக்கள், வீடியோக்களை பார்த்து விட்டு, ஒரு சிலர் திருமண மற்றும் சில வைபோகங்களுக்கு போட்டோ, வீடியோ எடுக்க இவர்களை அணுகுவார்கள் போல தெரிகிறது.
இந்த இன்ஸ்டா போட்டோகிராபர்களும் அவர்களிடம் இலட்சங்களில் பில்லை போட்டு விட்டு, நிகழ்ச்சிகளுக்கும் நேரடியாக சென்று இஸ்டத்திற்கு போட்டோ எடுப்பார்களாம். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் 1 மாதத்திற்குள் ஆல்பங்கள் மற்றும் வீடியோக்களை தருவதாக கூறி பணத்தையும் பெற்று விட்டு அங்கிருந்து கிளம்பி விடுவார்களாம். 1 மாதத்திற்கு பின்னர் இவர்களை அணுகும் போது இன்னும் கூடுதல் நேரம் கேட்பார்களாம். தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் பிளாக் செய்து விட்டு அடுத்த மோசடிக்கு ஆள் தேடுவார்களாம்.
இந்த இன்ஸ்டாகிராம் போட்டோகிராபர்களிடம் பலரும் இலட்சங்களை இழந்து இருப்பதாக தெரிகிறது. எந்த வித முகவரியும் இல்லாமல் சமூக வலைதள பிரபலங்களை நம்பினால் இப்படி தான் ஏமாந்து போவீர்கள். நிகழ்ச்சிக்கு போட்டோவோ, வீடியோவோ எடுக்க வேண்டுமானால் உங்கள் ஊரில் இருக்கும் தரமான ஸ்டுடியோவை தேடி அணுகுங்கள். யாரோ ஒரு இணையதளவாசியை நம்பி இலட்சங்களை இழக்காதீர்கள் என சைபர் கிரைம் எக்ஸ்பெர்ட்கள் இந்த மோசடி குறித்து கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
“ பொதுவாகவே இன்ஸ்டாவில் பல மோசடிகள் விளம்பரங்கள் மூலம் நடப்பதாகவும் இது அதில் 1 சதவிகிதம் தான் என்றும் சமூகவலைதளவாசிகள் இந்த மோசடி குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர் “