உண்மையான அன்பு என்று ஒன்று இருக்கிறதா? அது என்ன தான் செய்யும்?
இந்த உலகின் பெரும்பாலான மனிதங்களின் இன்ப துன்பங்களுக்கு எல்லாம் அன்பு என்பதே காரணமாக இருக்கிறது. ஆனால் உண்மையான அன்பு என்று ஒன்று இருக்கிறது தானே அது என்ன தான் செய்யும்?
அன்பு எனை காயப்படுத்தியது, அன்பு என்னை தோற்கடித்தது, அன்பு என்னை தனிமைப்படுத்தியது என்றெல்லாம் கேள்வி பட்டு இருப்போம். ஆனால் அதெல்லாம் அன்பு எப்போதும் செய்வதே இல்லை. அன்பு என்னும் திரையில் மனிதம் செய்வது தான் இவையெல்லாம். உண்மையான அன்பு ஒரு வானம் போல, அதற்கு பூ வெளியில் மழை பொழிகிறோமா, இல்லை வெட்ட வெளியில் மழை பொழிகிறோமா என்பதெல்லாம் தெரியாது. அது பாரபட்சம் பார்க்காமல் பொழியும். அவ்வளவு தான்.
மனிதம் என்பது இங்கு அன்பை வெளிப்படுத்தும் கருவி தான். ஆனால் அன்பில் தான் உயிர் இருக்கிறது. அது தான் ஒரு மனிதம் உயிர்ப்பில் இருக்கிறது என்பதற்கான சான்றும் கூட. உண்மையான அன்பு உங்களை சுற்றி ஒரு மாயம் செய்யும். ஒரு தவம் புரியும். பிடித்தவர்களுக்கென உருகும். மனதில் பதித்தவர்களுக்கென மெனக்கெடும். அது உங்களை சுற்றி ஒரு காற்று போல இருக்கும். நீங்கள் வாழும் காலம் வரை அது உங்கள் உயிர்ப்பில் கலந்தே இருக்க நினைக்கும்.
உடலோ, அழகோ, பணமோ, பொருளோ பார்த்தெல்லாம் இந்த அன்பு உயிர்ப்பதில்லை. உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும் ஒரு கருவிலிருந்து அது உயிர்க்கும். அதற்கு கண்கள் கிடையாது. அழகை ரசிக்க தெரியாது. பணத்தின் வாசனை தெரியாது. ஆனால் அதற்கு உங்களை தெரியும். உங்களை மட்டுமே நேசிக்க தெரியும். உங்களை மகிழ்வித்திட அது ஏதும் செய்யும். எதுவும் செய்யும். எந்த சலனமும் இன்றி அதை ஏற்றுக்கொள்ள மட்டும் தயாராக இருங்கள். அதன் மீது நம்பிக்கை வையுங்கள். அது உங்களை நிச்சயம் புதிதாய் புதிய மனிதமாய் உயிர்ப்பிக்கும்.
உண்மையான அன்பு என்பது நிச்சயம் இருக்கிறது. அது நிச்சயம் உங்களாலும் ஒரு நாள் உணரப்படும். அது வார்த்தைகளால் தன்னை நிரூபிக்க நினைக்காது. ஒவ்வொரு முறையும் உங்களை நிஜத்தில் உணர வைக்கும். அவ்வாறு நீங்கள் உணரும் போது உங்களுக்கான நம்பிக்கையை அதன் மீது காட்டுங்கள். பின்னர் அதாகவே உங்களை இறுகப்பற்றிக் கொள்ளும்.
“ இருக்கிறது, உண்மையான அன்பும் இருக்கிறது, உண்மையான அன்பை தாங்கி நிற்கும் மனிதமும் இருக்கிறது. காத்திருந்து அதை காதல் ஆக்குங்கள், அவ்வளவு தான் “