பேருந்துகளின் மூலம் நடத்தப்படும் கடத்தல்களை தடுக்க இனி பயணிகள் பரிசோதனை கட்டாயம்!
அரசுப்பேருந்துகளின் வாயிலாக தடைசெய்யப்பட்ட பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்க இனி பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் பொருள்கள் கட்டாயம் சோதனைக்குட் படுத்தப்பட வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
கார்கள், பைக்குகளில் தடை செய்யப்பட்ட பொருள்களான கஞ்சா உள்ளிட்டவைகளை கடத்தினால் பிடிபட்டு விடுகிறோம் என்று ஒரு சில கும்பல்கள் அரசுப் பேருந்துகளில் பயணிப்பது போல ஒரு சில கடத்தல் பொருள்களை கை மாற்றுவதாக வந்த தகவல்களின் படி, இனி பயணிகள் மற்றும் பயணிகள் கொண்டு வரும் பொருள்கள் சோதனைகுட்படுத்தப்பட வேண்டும் என போக்குவரத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இது போக ஆள் இல்லாமல் பேருந்துகளின் மூலம் நடக்கும் லக்கேஜ் பரிமாற்றங்களுக்கு வருகின்ற லக்கேஜ்களையும் நடத்துனர்கள் முறைப்படி சோதனை செய்தே பேருந்துகளில் ஏற்ற வேண்டும் என்றும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இதையும் தாண்டி பேருந்துகளில் கடத்தல் பொருள்கள் பிடிபட்டால் அதற்கு அந்த பேருந்துகளை வழிநடத்துகிற நடத்துனர் மற்றும் ஓட்டுநரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
“ பேருந்துகள், ஆம்புலன்ஸ்கள் என்று கடத்துபவர்கள் வித்தியாச வித்தியாசமாக யோசித்திடும் போது, அரசும் இதைப்போல தக்க நடவடிக்கைகள் எடுத்தால் தான் இத்தகைய கடத்தல்களை ஓழித்திட முடியும் “