நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல்!
நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் மசோதா தமிழக சட்டபேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நேற்று 19 வயதுடைய சேலம் மாணவர் தனுஷ் என்பவர், தனது மூன்றாவது முயற்சியில் நீட் தேர்வை எழுத விளைந்த போது, அதை எதிர் கொள்ள முடியாமல் பயத்தினால் தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுக்க தீப்பொறியைக் கிளப்பியது. பல்வேறு தரப்பினரும் ஆளும் தற்போதைய கட்சியினை விமர்சித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் இன்று ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
அதில் அவர் கூறி இருப்பதாவது, நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும், ஏனைய மாநிலங்களிடமும் நீட் தேர்வு குறித்த அவலங்களை விலக்கி, முழுமையாக ஆதரவு பெற்று இந்த நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு விரைவில் வாங்கப்படும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒரு குழந்தைக்கு எத்தகைய கல்வி கொடுக்க வேண்டும் என்று அக்குழந்தையின் பெற்றோர் அல்லது ஆசிரியருக்கு தான் தெரியும். மாற்றான் ஒருவன் வந்து அக்குழந்தைக்கு புரியாத ஒன்றை கல்வி என்று புகுத்தினால் அக்குழந்தைக்கு கல்வி என்றாலே பயம் வந்து விடும் வெறுப்பு வந்து விடும். அப்படி இருக்கையில் ஒரு மாநிலமே, அந்த மாநிலத்தின் மாணவர்களின் தன்மையை அறிந்திருக்கும் நிலையில், மத்திய அரசு அந்த மாநிலத்திற்குள் புகுந்து புதியதாக ஒரு கொள்கையை வகுத்து ஒரு தேர்வை எழுது உனக்கு மருத்துவ சீட்டு தருகின்றேன் என்று நீட்டை கொண்டு வந்து அந்த மாணவர்களுக்குள் பயத்தை விதைப்பதிலும் கனவை சிதைப்பதிலும் என்ன நியாயம் இருக்கிறது என்பது சமூக வல்லுநர்கள் பலரின் கருத்தாக இருக்கிறது.
“ பல்வேறு கலாசாரங்களும் பல்வேறு பாரம்பரியங்களும் பல்வேறு தன்மைகளும் பரவிக்கிடக்கும் இந்தியாவில், கல்வி மாநிலத்தின் உரிமையாக கருதி, மாநிலப்பட்டியலில் சேர்க்கப்பட்டாலே இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு மாணவர்களின் நலனை பேண முடியும் “