பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பு – தமிழக பட்ஜெட்
சென்னை கலைவாணர் அரங்கில் காலை முதலே தொடங்கப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு சிறப்பு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் பெட்ரோலியம் தொடர்பான அறிவிப்புகளின் கீழ், நடுத்தர ஏழை மக்களை கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை மீதான வரியை மூன்று ரூபாய் குறைப்பதாக அறிவித்துள்ளார். இதனால் ஆண்டுக்கு ரூபாய் 1160 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் அரசு சமாளித்துக்கொள்ளும் என்று அறிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே நூறு ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படும் பெட்ரோல், என்று குறையும் என்று மக்கள் ஏக்கம் கொண்ட நிலையில் அதன் மீதான வரியை மூன்று ரூபாய் அளவிற்கு தமிழக அரசு தனது பட்ஜெட்டில் குறைத்திருப்பது வரவேற்க தக்கதாக கருதப்படுகிறது.
“ எனினும் பெட்ரோல் என்பது கடைக்கோடி மனிதனுக்கும் இன்றெல்லாம் அத்தியாவசியமாகிறது. அந்த அத்தியாவசியத்தின் மேல் இன்னமும் கூட மத்திய மாநில அரசுகள் வரிகளைக்குறைக்கலாம். பணம் இருப்பவர்கள் வாங்குகின்ற Shareகளுக்கெல்லாம் வரி விலக்கு அரசு கொடுக்கின்ற போது அன்றாட பிழைப்புக்கு அல்லாடுபவனிடம் வரியைப்பிடுங்கி பிழைப்பை நடத்தும் இந்த அரசிடம் என்ன நியாயம் தான் இருக்கிறது என்பதே ஒரு சாதாரண தின கூலியின் கேள்வியாக இருக்கிறது “