அடிக்கடி செய்திகளில் வருகின்ற இந்த ’போக்சோ சட்டம்’ என்பது என்ன? அதன் கீழ் வரும் தண்டனைகள் என்ன?
அடிக்கடி நாளிதழ்களில் பார்த்திருப்போம், போக்சோ வழக்கில் அவர் கைது, இவர் கைது என்று, அந்த போக்சோ சட்டம் என்பது என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
POCSO Act 2012 – Protection Of Children From Sexual Offences 2012: சிறார்களை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டல்களில் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டமே இந்த போக்சோ சட்டம். இச்சட்டம் மக்களவை மற்றும் மாநிலங்களையில் நிறைவேற்றப்பட்டு கடந்த 2012 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.
போக்சோ பிரிவு 3 மற்றும் 4: இப்பிரிவுகளின் கீழ் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு உள்ளாக்கியவர்களுக்கு குற்றத்தின் தன்மையை பொறுத்து, குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் அபராதத்துடன் வழங்கப்படும்.
போக்சோ பிரிவு 7 மற்றும் 8: இப்பிரிவுகளின் கீழ் குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை ஒருவர் தொடுவது அல்லது வேறு ஒருவரின் அந்தரங்க உறுப்புகளை தொட வைப்பது போன்ற குற்றங்களுக்காக 3 ஆண்டு முதல் 8 ஆண்டு வரை சிறைத்தண்டனை அபராதத்துடன் வழங்கப்படும்.
போக்சோ பிரிவு 9 மற்றும் 10: இப்பிரிவுகளின் கீழ் குழந்தைகளை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியவர்கள், அவரது பெற்றோராகவோ, காப்பாளர்களாகவோ இல்லை வேறு ஏதும் அதிகாரிகளாகவோ இருப்பின் அவர்களுக்கு குற்றத்தின் தன்மை பொறுத்து 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அபராதத்துடன் வழங்கப்படும்.
போக்சோ பிரிவு 11 மற்றும் 12: இப்பிரிவுகளின் குழந்தைகளை சமூக வலைதளங்களின் மூலம் பாலியல் இச்சைக்கு உட்படுத்துபவர்கள், அலைபேசியில் ஆபாசமாக குழந்தைகளிடம் உரையாடல் செய்பவர்கள் உள்ளிட்டோர்க்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் வழங்கப்படும்.
போக்சோ பிரிவு 13 மற்றும் 14: குழந்தைகளை ஆபாச படங்கள் எடுத்து அதை விற்பவர்கள், தொழில் ரீதியாக பயன்படுத்துபவர்கள் மற்றும் அடுத்தவர்களுக்கு பகிர்பவர்களுக்கு இப்பிரிவுகளின் கீழ் 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் வழங்கப்படும்.
போக்சோ பிரிவு 18: இப்பிரிவுகளின் கீழ் குழந்தைகளிடம் பாலியல் வன்புணர்வுக்கு ஒரு முயலும் பட்சத்தில் அவருக்கு 1 வருட சிறைதண்டனையும் அபராதமும் வழங்கப்படும்.
போக்சோ பிரிவு 21: இப்பிரிவுகளின் கீழ் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மறைப்பவர்களுக்கு 6 மாதம் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் வழங்கப்படும்.
ஒரு ஆண்டில் பதியப்படும் போக்சோ வழக்கில் அது 99 சதவிகிதம் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றமாகவும், 1 சதவிகிதம் ஆண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றமாகவும் இருக்கிறதாம். கடந்த டிசம்பர் 2023 நிலவரப்படி நாட்டில், 2.43 இலட்சங்களில் போக்சோ வழக்கு நிலுவையில் இருக்கிறதாம். டெல்லியில் உள்ள போக்சோ நிலுவை வழக்கை மட்டும் முடிக்கவே 27 வருடங்கள் ஆகும் என ஒரு சில கணிப்புகள் கூறுகின்றது.
“ ஒரு பாலியல் குற்றம் அதுவும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் என்னும் போது அதற்கு தண்டனை என்பது விரைவில் கிடைக்க வேண்டும் என்பது அவசியமாகிறது. அது தாமதமாகும் போது அந்த குற்றத்தை செய்தவர் இன்னும் பல பாலியல் குற்றத்தில் ஈடுபட வாய்ப்புகள் இருக்கிறது. வருங்காலங்களில் ஆவது நிலுவை இல்லாத இப்படிப்பட்ட வழக்குகள் இருக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் “