பெகாசஸ் விவகாரம்: இந்திய அரசின் நிறுவனமே இந்தியாவின் முக்கிய பிரமுகர்களை உளவு பார்த்ததா?

’ தி வயர் ‘ எனப்படும் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி பெகாசஸ் எனப்படும் இஸ்ரேலிய உளவுக் கருவியை வாங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருப்பதாகவும்,மேலும் இந்தியாவில் நீதிபதி,பத்திரிக்கையாளர்கள்,கட்சி தலைவர்கள்,தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்ட 300-க்கும் பேற்பட்டோர் அந்த உளவுக்கருவியால் உளவு பார்க்கப்பட்டதாகவும் அந்த தரவுகள் கூறுகின்றன. இது மட்டும் அல்லாமல் இந்த உளவுகள் அனைத்தும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நிறுவனம் ஒன்றிலிருந்தே நடந்திருப்பதாகவும் அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.

பெகாசஸ் என்பது இஸ்ரேலின் NSO என்னும் குழு வடிவமைத்த ஒரு ஸ்பைவேர் ஆகும். இதன் மூலம் ஒருவரின் தொலைபேசி,வாட்சப்,மெயில் உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் மென்பொருள்களையும் தகவல்களையும் உளவு பார்க்க முடியும். இது பொதுவாக ஒரு நாட்டின் ராணுவ உபயோகத்திற்காக தீவிரவாதிகளையும் பயங்கரவாதிகளையும் கண்காணிக்க பயன்படுத்தப்படும் ஸ்பைவேர் ஆகும். ஆனால் இதை தனிமனிதர்களான பத்திரிக்கையாளர்கள்,நீதிபதிகள்,கட்சி தலைவர்கள் போன்றோர்களை உளவு பார்க்க பயன்படுத்தியது ஏன்..? அதும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நிறுவனமே சாதாரண இந்தியக்குடிமகனை உளவு பார்க்க பயன்படுத்தியது ஏன்? என்பது தான் இங்கு பலராலும் எழுப்பப்படும் கேள்வி.

தனிமனிதனாகிய ஒருவரின் தொலைபேசியையோ கணினியையோ ஸ்பைவேர் கொண்டு உளவு பார்ப்பது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்தியா ஒரு ஜனநாயக நாடு, இங்கு தனிமனிதர்களின் தரவுகளை ஒரு நிறுவனமோ அரசோ தனிமனிதனோ ஸ்பைவேர் எனப்படும் கண்ணுக்கு புலப்படாத கண்களை வைத்து கண்காணிப்பது என்பது அவர்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாக அமையும்.

சரி இந்த உளவுகளின் மூலம் கிடைக்கும் தகவல்களை,தரவுகளை வைத்து என்ன தான் செய்வார்கள்?

ஆம்! இன்றைய பொழுதில் ஒருவரின் தரவுகள் வைத்து எதையும் தீர்மானிக்க முடியும். உங்களுடைய செல்லிடப்பேசியில் உள்ள தரவுகளை வைத்தே இன்று நீங்கள் யார் என்று தீர்மானித்து விடலாம் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதையும் தீர்மானித்து விடலாம்.உதாரணத்திற்கு ஒரு நீதிபதி உளவு பார்க்கப்பட்டால் நாளைய தீர்ப்பை கணித்து விடலாம். ஒரு தேர்தல் அதிகாரி உளவு பார்க்கப்பட்டால் தேர்தல் நடைமுறைகளை கணித்து விடலாம். ஒரு எதிர்கட்சி தலைவர் உளவு பார்க்கப்பட்டால் அவர் வெற்றிக்காக என்னென்ன நடைமுறைகளை கையாளுகிறார் என்பதை கணித்து விடலாம். அப்படி என்றால் இந்தியாவில் தீர்ப்புகள்,தேர்தல் தகவல்கள்,தேர்தல் கணிப்புகள்,பத்திரிக்கை நிறுவனங்களின்  முக்கிய தகவல்களை உளவு பார்ப்பதற்கென்றே பெகாசஸ் இந்திய நிறுவனத்தால் முறையின்றி வாங்கப்பட்டதா…? எத்தனை கேள்விகள்,எத்தனை குழப்பங்கள் தான் இந்த விவகாரத்தில்…! ஒன்று மட்டும் இதில் உறுதியாகிறது நாம் கண்காணிக்கப்படுகிறோம்.

“ இந்த உளவுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒரு ஜனநாயகமே அந்த ஜனநாய மக்களின் மீது தொடுத்த மிகப்பெரிய கண்காணிப்பு போராக இது இருக்கும். நம்மை திருடி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்கிறார்கள் என்றால் இங்கு நாம் பறிபோகிறோம்.”

About Author