அழிந்து வரும் இனம் ஆக அறியப்படும் கழுதை பற்றிய அரிய தகவல்கள்!
அழிந்து வரும் இனம் ஆக அறியப்படும் கழுதை, பல அரிய குணங்களையும், பல அரிய நன்மைகளையும் உள்ளடக்கியது என்றால் நம்ப முடிகிறதா?
பொதுவாக கழுதை என்றாலே சமூகத்தில் கிட்டதட்ட ஒரு அருவருப்பான இனமாக தான் பார்க்கப்படுகிறது, பிறரை திட்டுவதற்கு கூட கழுதை என்ற வார்த்தையை ஒரு சிலர் பயன்படுத்துவதுண்டு, ஆனால் கழுதை பல அரிய குணங்களையும், பல அரிய நன்மைகளையும் உள்ளடக்கியது. அந்த காலத்தில் கழுதைகளை, மாடுகளை விட அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்து கொண்ட நாடுகள் இருக்கிறதாம்.
குதிரை இனத்தை சேர்ந்த கழுதை, குதிரையை விட பல அரிய குணங்களை கொண்டது, ஒரு சரிவான கரடு முரடனா பெரிய மலையிலும் கூட, பொதிகளை சுமந்து கொண்டு கழுதை ஏறி இறங்கி விடும், பல நாட்கள் சாப்பிடமால் தாக்கு பிடிக்கும். வேலை என்று வந்து விட்டால் கெட்டித் தனமாக இருக்கும். போக்குவரத்துகள் இல்லாத அந்த காலக்கட்டத்தில் பொதிகளை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல கழுதை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
பல நாட்டு அரசர்களின் படையில் கழுதையும் இருந்து இருக்கிறது. ஆயுதங்களை பல மைல் தூரம் சுமப்பதற்காக அரசர்கள் கழுதையை பயன்படுத்தினார்களாம். பெரிய பெரிய கோவில் கட்டுவதற்கு தேவைப்படும் மணல்களை சுமக்க அப்போதே கட்டுமான தொழிலாளர்கள் கழுதையை பயன்படுத்தியதாக ரோமானிய வரலாறு கூறுகிறது. முட்கள், கற்கள், மேடு, பள்ளம் என எதுவும் பாராமல் சகிப்புகளோடு அதற்கு கொடுத்த வேலையை சரியாக செய்யுமாம் கழுதை.
கழுதை மட்டும் அல்ல, அதனுடைய பாலும் பல மருத்துவ குணங்கள் மிக்கது. கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள், கல்லீரல் செயலிழக்கும் தன்மையில் உள்ளவர்கள் கழுதைப் பாலை தொடர்ந்து பருகி வந்த போது அது மீள்வதை உணர முடிந்ததாம். பல சுவாச பிரச்சினைகளுக்கும், சரும பிரச்சினைகளுக்கும் கழுதைப்பால் உகந்ததாக கூறப்படுகிறது. பல வித அம்சங்களை உள்ளடக்கிய கழுதையை தற்போதெல்லாம் வளர்ப்பதையே கவுரவ குறைச்சலாக நினைக்கின்றனர். வெளிநாடுகள் கழுதையின் மகத்துவத்தை உணர்ந்து கழுதைப் பண்ணையே வைக்க துவங்கி விட்டனராம்.
“ தமிழகத்தை எடுத்துக் கொண்டால் தற்போது நம்மிடம் இருக்கும் கழுதையின் எண்ணிக்கை 500 -க்கும் குறைவு, ஒரு சில சமூக ஆர்வலர்கள் அழிந்து வரும் கழுதை இனத்தை மீட்டெடுக்க முயன்றாலும் கூட பொது ஜனங்களும் அதை நினைத்தால் மட்டுமே அது சாத்தியம் ஆகும் “