ஹைதராபாத்தில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை!
ஹைதராபாத்தில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனது அண்டை வீட்டில் வசிக்கும் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் தீப்பொறியைக் கிளப்பி உள்ளது.
சைதாபாத் காவல் நிலையத்திற்கு சிறுமி ஒருவர் காணவில்லை என்று அவரின் பெற்றோரின் மூலம் ஒரு புகார் வந்திருந்தது. அந்த புகாரின் பேரில் விசாரித்த காவலர்கள், விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜூ என்பவர் தான் அவரின் அண்டை வீட்டில் வசித்து வந்த ஆறு வயதே ஆன அச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்ததாக தெரிய வந்தது.
குழந்தை இறந்தது தெரிந்ததுமே தான் தங்கி இருந்த இடத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகி உள்ளார் குற்றம் சாட்டப்பட்ட ராஜூ என்பவர். ஹைதராபாத் காவல் துறை அவரின் மேல் வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து அந்த சுற்று வட்டாரம் முழுக்க அவரைத் தேடி வருகிறது. அவரைத் தேடிப்பிடித்து தூக்கில் போட்டாலும் அந்த குழந்தைக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு அத்தண்டனை துளியும் ஈடாகிடாது.
இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த காவல் நிலையங்களில் ஒரு நாளில் பாலியல் வன்கொடுமை குறித்து பதிவாகும் வழக்குகள் மட்டும் சராசரியாக 91, இதில் பதிவான வழக்குகள் மட்டும் இவ்வளவு என்றால், பதிவில்லாமல் என்றால் ஒரு நாளைக்கு எத்தனை வன்கொடுமை தான் இந்தியாவில் நிகழ்கிறது? யோசித்தால் நிச்சயம் அனைவரும் நெஞ்சும் பதை பதைக்கும், என்ன தான் தீர்வு இதற்கு? சட்டத்தில் சீர்திருத்தம்தேவைப்படுகிறதா? இல்லை கண்காணிப்பில் தீவிரம் தேவைப்படுகிறதா? கடும் சட்டமும் தேவைப்படுகிறது. தீவிர கண்காணிப்பும் தேவைப்படுகிறது.
“ ஆறு வயது சிறுமியான அவள், அந்த கண்களுக்கு ஒரு குழந்தையாக தெரியவில்லையா? அந்த வக்கிர கண்களுக்கு இரையாகி உயிரையும் மாய்த்து போன அந்த பச்சிளம் மேனிக்கு, அவன் இழைத்த அநீதிக்கு இங்கு எந்த நீதியாலும் அதற்கு ஈடான தண்டனையை தந்து விட முடியாது “