இந்திய அணியின் படைத்தளபதி ரிஷப் பன்ட்க்கு இன்று 24 ஆவது பிறந்தநாள்!
’வந்தா மல, போனா டேஷ்’ என்று களத்தில் அதிரடிக்கு பெயர் போனவர் ரிஷப் பன்ட். ஒத்த கை சிக்ஸ், பேக்வேர்டு சாட்ஸ் என்று இன்னோவேட்டிவாக கையை சுழற்றி விளையாடும் திறன் கொண்டவர். தற்போதைய இந்திய அணியின் ஒரு படைத்தளபதி என்று கூட அவரைச் சொல்லலாம்.
ஒரு நாட்டைக் காக்க, தன் உயிரை முன் நிறுத்தி, வாளைக் கையில் எடுத்து சுழட்டி திறம்பட போர் புரிபவனை தான் பொதுவாக படைத்தளபதி என்பார்கள். இதில் அவன் உயிர் போவதை பற்றிக் கூட அவன் கவலை கொள்ள மாட்டான். அது போல தான் அணி துவண்டு போன நிலையில் போராடிக்கொண்டு இருக்கும் போது, தன் விக்கெட் போனாலும் பரவாயில்லை தன் அணியின் வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு, பேட்டை வாளென சுழற்றி எதிரணியை நோக்கி ஒரு அதிரடி புரிந்து, அபார போர் புரியும் படைத்தளபதி தான் ரிஷப் பன்ட்.
ஒரு காலத்தில் தோனி இருந்த இடத்தில் ’ரிஷப் பன்ட்டா..?’ என்ற கேள்வி பலரிடம் இருந்து வந்தது. களத்தில் ரிஷப் பேன்ட் ஒரு தவறு செய்தால் போதும், அங்கு ஓராயிரம் முறை ‘தோனி.. தோனி.. தோனி..’ என்று ரசிகர்களின் பேரொலி ஒலிக்கும். ஒரு வீரன் எவ்வளவு பெரிய தனித் திறமையோடு களத்தில் நின்றாலும் சுற்றி இருக்கும், மக்கள் அவனை வேறு ஒரு வீரனோடு ஒப்பிட்டு அவனை மட்டம் தட்டினால் அது அவனை களத்தில் நிலைகுலைய வைக்கும். ஆனால் அதையெல்லாம் கண்டு சோர்ந்து போக வில்லை ரிஷப் பன்ட்.
தனக்கு கிடைத்த ஒரு சில வாய்ப்புகளை தவற விட்டு இருந்தாலும், அடுத்தடுத்த சில வாய்ப்புகளை தங்கமாகவே மாற்றிக் கொண்டார் ரிஷப் பன்ட். குறிப்பாக அவர் பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாண்ட விதத்தை சொல்லியே ஆக வேண்டும். இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அது, அதற்கு முன்னர் வரை 1-1 என்று இரு அணிகளும் சம நிலையில் இருந்து வந்தது.
விராட் கோலி இல்லை, பும்ரா இல்லை, இஷாந்த் சர்மா இல்லை என்று நட்சத்திர வீரர்கள் யாரும் அந்த போட்டியில் இல்லை, 328 ரன்கள் இலக்கு இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா நிர்ணயித்து இருந்தது. புஜாரா 56(211), கில் 91 (146) என்று அவுட் ஆனதிற்கு பிறகு இந்த மேட்ச் எப்படியேனும் டிரா நோக்கியாவது செல்ல வேண்டும் என்றே ரசிகர்கள் வேண்டிக் கொண்டு இருந்தனர்.
ஒரு சாதாராண வீரனாக இருந்தால், அணியை எப்படியாவது ட்ராவாவது செய்து தொடரை சமன் செய்து விட வேண்டும் என்ற நோக்கில் தான் விளையாடி இருப்பான். ஆனால் இவனோ படைத்தளபதி அல்லவா. வெற்றி என்பது மட்டுமே அவன் கண்ணில் இலக்காக நின்றது. ஆஸ்திரேலியா எனப்படும் அந்த ஜாம்பவான் அணிக்கு எதிராக, அதிரடியாக 89* ரன்கள், ஒன்பது போர்கள், ஒரு சிக்ஸ்கள் என்பதும் அதில் அடங்கும். கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றான் அந்த படைத்தளபதி ரிஷப் பன்ட்.
அப்போட்டிதனோடு டெஸ்ட் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்சில் ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றார் ரிஷப் பன்ட். அவர் ஆயிரம் ரன்களை அடைய வெறும் 27 இன்னிங்ஸ்களையே எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு இந்திய சாதனை. தற்போதைய ஐபிஎல்-லிலும் ஒரு கேப்டனாக டெல்லி அணியை ப்ளே ஆப்-யிற்கு தகுதி பெற வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“ குறுகிய காலத்தில் மிகப்பெரிய இடம், தன் திறமையை ஒட்டு மொத்தமாக அணிக்காக அர்ப்பணித்து பயமின்றி போர்புரியும் ரிஷப் பன்ட் போன்ற படைத்தளபதிகள் நிச்சயம் நிறையவே இந்திய அணிக்கு தேவை, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் படைத்தளபதி ரிஷப் பன்ட் “