இந்திய அணியின் படைத் தளபதியாக விளங்கிய யுவராஜ்க்கு இன்று 40 ஆவது பிறந்தநாள்!
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரர்களுள் ஒருவராக கருதப்படும் யுவராஜ் சிங்குக்கு இன்று 40 ஆவது பிறந்த நாள்.
2007 டி20 உலக கோப்பை, 2011 ஒரு நாள் போட்டி உலக கோப்பை என இரண்டு கோப்பைகளையும் இந்திய அணி கைப்பற்றியதில் மிகவும் முக்கிய பங்கு வகித்தவர் யுவராஜ் சிங். அவர் இந்திய அணிக்காக ஆற்றிய பங்கு என்பது மிகவும் அதிகம். கிரிக்கெட் ரசிகர்கள் இன்று அவரது 40 ஆவது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடி வருகின்றன.
பொதுவாக படைத்தளபதி என்பவன் போரில், தன் உயிரை மாய்த்தேனும் தன் சார்பு கூட்டத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கோடு, உயிரை முன் வைத்து போர் புரிபவன். யுவராஜ் சிங்கும் கிட்ட தட்ட அப்படி ஒரு படைத் தளபதி தான். சிறு சிறு காயங்களுக்கே போட்டியில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளும் வீரர்களுக்கு மத்தியில், கேன்சர் என்ற மிகப்பெரிய வியாதியை உடலில் வைத்துக் கொண்டு 2011 உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்து விளையாடியவர்.
2011 உலககோப்பையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், விளையாடிக் கொண்டு இருக்கும் போதே வாயில் இருந்து ரத்த வாந்தி வந்த போதும் கூட, போட்டியில் இருந்து விலகாமல், 113(123) ரன்களை அதிரடியாக குவித்து இருப்பார். அது மட்டும் அல்ல அந்த உலக கோப்பை முழுக்க 15 போட்டிகள் விளையாடி 362 ரன்கள் எடுத்து 15 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி, Man Of The Tournament என்ற விருதையும் வாங்கி இருப்பார் யுவராஜ் சிங்.
“ செய் அல்லது செத்து மடி என்ற கூற்றில் உண்மை இருக்கலாம், ஆனால் ’செத்தேனும் செய்து முடி’ என்பது யுவராஜ் சிங்கின் கூற்று போல, பயமறியா அத்தகைய படைத்தளபதிக்கு இடம் பொருளின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் “