தொடர்ந்து சொதப்பும் கோலி,78 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி!

லீட்ஸ் மைதானம், இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, பேட்டிங்குக்கு சாதகமான களம், டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி. பால் பழையதாக பழையதாக பேட்டிங்குக்கு சாதகமாகும் என்ற நிலையில் பொறுமையா ஆடாமல் முதல் 11 ஓவர்களுக்குள்ளேயே ராகுல்,புஜாரா மற்றும் கோலி உட்பட மூன்று நட்சத்திர வீரர்களும் தங்கள் விக்கெட்டுக்களை ஆண்டர்சனின் ஆக்ரோசத்திடம் பறி கொடுத்தனர்.

ரோஹிட் (19), ரஹானே (18) தவிர மீதமுள்ள அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் 40.4 ஓவர்களில் வெறும் 78 ரன்களையே இந்திய அணியால் எடுக்க முடிந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து, அதுவும் பேட்டிங்குக்கு சாதகமான களத்தில் ஆடி 34 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு மோசமான ரன்னை எடுத்திருப்பது, இந்திய அணிக்கு மிகப்பெரும் சரிவாகும். இது சரி அதற்கு அடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய வந்த போது பும்ரா, சிராஜ் என்று தொடர்ந்து இந்த சீரியசில் கலக்கி வரும் நட்சத்திர பந்து வீச்சாளர்களிடம் பந்து வீச கொடுக்காமல் இஷாந்தை அழைத்ததற்கான காரணமும் தெரியவில்லை.

லீட்ஸ் மைதானாம் கடந்த புள்ளி விவரங்களை வைத்து பார்க்கையில் ஒரு பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்றே அறியப்படுகிறது. முதல் 20-25 ஓவர்கள் மட்டுமே பந்து வீச்சாளர்களுக்கு எடுபடும். அப்படி இருக்கையில் விக்கெட் எடுக்கும் நோக்கில் பும்ரா, சிராஜை பந்து வீச அழைக்காமல் இங்கிலாந்து அணி வந்ததும் இஷாந்தை பந்து வீச அழைத்தது ஏன் என்று பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. 42 ஓவர்கள் ஆடிய இங்கிலாந்து அணி 120 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டுக்களையும் இழக்க வில்லை. ரோரி பர்ன்ஸ் 52 ரன்களிலும் ஹசிப் ஹமீது 60 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இன்று இரண்டாம் நாளில் தொடக்கத்திலேயே விக்கெட்டுக்களை எடுக்க இந்திய அணி முயலவில்லையெனில் இந்த போட்டி இந்திய அணியிடம் இருந்து நழுவுவது உறுதியாகி விடும்.

தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோலி இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோற்பின் ஒட்டு மொத்த தோல்விக்கும் முழு முதற்காரணத்தை அவரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. டெஸ்ட் போட்டி என்பது எந்த நிலையிலும் எந்த சிறு தவறிலும் கை நழுவிப்போக கூடிய போட்டி. சிறு சிறு தவறும் ஆட்டத்தை மாற்றும் என்ற நிலையில் முடிவுகளை சரியாக எடுப்பதில் கோலிக்கு இன்னமுமே பயிற்சி வேண்டும்.

“ இந்திய அணி மீண்டு வருமா? இல்லை துவண்டு போகுமா? இன்று நடக்கும் இரண்டாம் நாள் ஆட்டமே அதை முடிவு செய்யும், இந்திய அணி தனது முழு ஆக்ரோசத்தையும் வெளிப்படுத்தினால் மட்டுமே இந்த ஆட்டத்தில் வெற்றியை நோக்கி நகர முடியும் “

About Author