IPL 2023 | ‘ஏன் இந்த வெற்றி, சென்னை ரசிகர்களுக்கு இவ்வளவு உணர்வு பூர்வமானது?’
ஐபிஎல் 2023-யின் இறுதிப்போட்டியில் சென்னை அணி குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஏன் இந்த வெற்றி ஒவ்வொரு சென்னை ரசிகர்களுக்கும் உணர்வுபூர்வமானது என்றால் அதற்கு காரணம் கேப்டன் மகேந்திர சிங் தோனி என்ற ஒருவர் மட்டுமே. இரண்டு உலககோப்பைகளை இந்தியாவிற்காக வென்று கொடுத்த ஒரு தலைமைக்கு அவர் ஓய்வு பெறும் போது ஒரு சரியான பேர்வெல் இல்லை என்று ஒவ்வொரு ரசிகனுக்கும் ஏக்கம் இருந்தது.
சரி சர்வதேச போட்டிகளில் தான் இல்லை. நிச்சயம் ஐபிஎல் கொடுக்கும் என்று எண்ணிய போது போன சீசன் சென்னை அணிக்கு சிறப்பாக அமையவில்லை. இந்த சீசன் ஆரம்பித்த போதும் அவ்வளவு நம்பிக்கை எல்லாம் இல்லை. தோனியின் மீது இருந்தது, தோனியின் தலைமையின் மீது இருந்தது. ஆனால் பக்கபலமாக அணியில் வீரர்கள் யாரும் இல்லையே என்ற குறை இருந்து கொண்டே இருந்தது.
ஆனாலும் அந்த படையை கூட மெருகேற்றி, மெருகேற்றி, இறுதிப் போட்டி வரை கொண்டு வந்தார் தலைமை எம் எஸ் தோனி. ஆட்டத்தின் முதல் பாதியே சென்னை அணியை கதிலகங்க தான் செய்தது. தோற்று விடுவோமோ, எங்கே தோனிக்கு இங்கும் ஒரு நல்ல பேர்வெல் கிடைக்காமல் போய் விடுமோ என்ற கலக்கம் ஒவ்வொரு ரசிகனின் முகத்திலும் இருந்தது. இதில் மழை வேறு மிகப்பெரிய சதி செய்தது.
ஓரு வழியாக டக்வொர்த் லீவிஸ் முறையில் 171 ரன்கள் டார்கெட். வரிசையாக ஒவ்வொரு வீரரும் தன் பங்கினை சிறப்பாக செய்து விட்டு பெவிலியன் திரும்பி கொண்டே இருந்தனர். ரன் ரேட் நிலையாக 12 ரன்களிலேயே இருந்து கொண்டு இருந்தது. சரி இறுதியில் தோனி இருக்கிறார் பார்த்துக் கொள்வார் என்று நினைத்த ரசிகர்களுக்கு, தோனி 0(1) என்று மோஹித் சர்மா பந்தில் வந்ததும் மில்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி சென்றார்.
அங்கே உடைந்தது ஒட்டு மொத்த சென்னை ரசிகனின் நம்பிக்கை. அடுத்த ஓவரில் ஷமி 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுக்க, கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை. ஜடேஜா, ஷிவம் துபே களத்தில், நான்கு பந்துகள் நான்கு யார்க்கர்களை சமர்ப்பித்தார் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் மோஹித் ஷர்மா. திணறிப்போனது சிஎஸ்கே. ஒரு பக்கம் அவ்வளவு தான் இனி இங்கும் நம்ம தோனிக்கு சிறந்த வழியனுப்புதல் இருக்காது என்று அழவே துவங்கி விட்டனர் ஒரு சில சென்னை ரசிகர்கள். தோனியின் முகத்தையும் பார்க்க முடியவில்லை.
எதற்கும் கலங்காத, ஏங்காத கண்கள் அன்று பல ஏக்கங்களை, வலிகளை சுமந்தது போலவே தென்பட்டது. கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை. களத்தில் ஜடேஜா. முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்க விடுகிறார். மீண்டும் கிரவுண்ட் புத்துணர்ச்சி பெறுகிறது. சென்னை ரசிகர்களின் சத்தம் காதை கிழித்தது. கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை. தோனி மிகவும் உடைந்து தலை குனிந்த நிலையில் காணப்பட்டார். ஆனால் ஜடேஜா முகத்தில் எந்த பதற்றமும் இல்லை. மோஹித் ஷர்மா போட்ட கடைசி பந்தை அப்படியே திருப்பி விட்டு நான்கு ரன்கள் எடுத்து சென்னை அணியின் ஆகச்சிறந்த ஒரு வெற்றிக்கு வழி வகுத்தார்.
சென்னை அணியின் ஒட்டு மொத்த டீமும் கிரவுண்டுக்குள் படை எடுத்த போது, தோனி மட்டும் ஒரு 5 நொடி அப்படியே கண் கலங்கி உட்கார்ந்து இருந்தார். போர் அடித்து விட்டு ஜடேஜா ஓடி வந்து நின்றதே எம் எஸ் தோனியின் முன்பு தான். இதுவரை களத்தில் தோனி காட்டாத எமோசன்களை எல்லாம் ஜடேஜாவிடம் கொட்டி தீர்த்தார். எந்த போட்டியிலும் தோனியை எந்த ரசிகனும் இப்படி பார்த்திருக்க மாட்டான். அவர் கண்களில் அவ்வளவு எமோசன்கள் தெரிந்தது. ஒவ்வொரு ரசிகனும் நேரிலும், ஏன் நேரலையிலும் கூட அழுது விட்டான். இந்த வெற்றி மகேந்திர சிங் தோனி என்னும் ஆகச்சிறந்த தலைமைக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
“ ஏனோ தெரியவில்லை, என்ன தான் அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் கூட, அவர் மீதான அன்பு ரசிகர்களுக்கு அப்படியே இருக்கிறது. அதனால் தான் ஏனோ உலக கோப்பையை கையில் வாங்கும் போது கூட வராத அழுகை சென்னை அணியின் பேரன்பிற்காக தோனியின் கண்களில் இருந்து வருகிறது “