கடைசி இரண்டு இடத்திற்கு போட்டி போடும் மும்பை மற்றும் பெங்களுரு அணிகள்!
ஐபிஎல் 2024 யின் புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடத்திற்கு மும்பை மற்றும் பெங்களுரு அணிகள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன.
டு பிளஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி இதுவரை நான்கு போட்டிகள் விளையாடி அதில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி மூன்று போட்டிகள் விளையாடி மூன்றிலுமே தோல்வி கண்டு பெங்களுரு அணிக்கு அடுத்தபடியாக கடைசி இடத்தில் இருக்கிறது. தற்போது வரை இந்த இரண்டு அணிகளுமே கடைசி இரண்டு இடத்திற்கு தான் போட்டி போடுவதாக தெரிவதாக ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
சரி, இரு அணிகளின் இந்த நிலைக்கு காரணம் என்ன?
முதலில் பெங்களுரு அணியை எடுத்துக் கொண்டால், அவர்கள் ஏலத்தில் ஒரு நட்சத்திர பவுலர்களை கூட எடுக்க முற்படவில்லை. சரி நட்சத்திர பவுலர்களை தான் எடுக்கவில்லை, டொமஸ்ட்டிக் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பவுலர்களை ஆவது எடுப்பார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை. டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தி இருக்கும் யஸ்வேந்திர சஹாலை ரிலீஸ் செய்து மிகப்பெரிய முட்டாள்தனம் புரிந்தனர். இவ்வாறு பெங்களுரு அணி நிர்வாகம் தொடர்ந்து அணியை தேர்வு செய்வதில் மெத்தனம் காட்டி வந்தால், எவ்வளவு பெரிய ஸ்டார்கள் இருந்தாலும் கடைசி வரை பெங்களுரு அணி ‘ஈ சாலா கப் நமதே’ என்று வெறும் கையை வீசிக் கொண்டு சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.
மும்பை அணியை எடுத்துக் கொண்டால், நிர்வாகம் முழுக்க முழுக்க சுயநலம் பிடித்ததாக இருக்கிறது. அணிக்கு 5 கோப்பையை வாங்கி கொடுத்த ஒரு கேப்டனை தயவு தாட்சணை இல்லாமல் நீக்கி விட்டு, ஹர்திக்கை இழுத்துப் போட்டு அவருக்கு கேப்டன் பொறுப்பு கொடுத்தது எல்லாம் ரசிகர்களால் கூட இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஹர்திக்கை ஒரு வருடம் ரோஹிட் தலைமையில் ஆட விட்டு அவரை துணை கேப்டன் ஆக்கி இருந்தால், ரோஹிட் அணியை கட்டமைத்து இருப்பார், ஹர்திக் அதை அடுத்த சீசனில் வழிநடத்தவும் தயாராகி இருப்பார். நிர்வாகம் செய்த தவறால் தற்போது ஹர்திக் அணியை வழிநடத்த முடியாமல் திணறி வருகிறார். மும்பை அணியும் ஹாட்ரிக் தோல்வியை அடைந்து இருக்கிறது.
“ தவறுகள் வாய்ப்புகளுக்கு வழி வகுக்கும், இரு அணி நிர்வாகங்களும் இனியாவது வாய்ப்புகளை பயன்படுத்துமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “