தன் யார்க்கர்களுக்கு நிரந்தரமாக ஓய்வு கொடுத்த லசித் மலிங்கா!
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பவுலர் மற்றும் யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா அனைத்து தரப்பட்ட கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே டெஸ்ட் மட்டும் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்த லசித் மலிங்கா, தற்போது டி20 பார்மட்டில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தனது இடத்தை நிரப்ப அணியில் ஒரு இளம் பவுலரை தேட வேண்டிய சூழல் உருவாகி இருப்பதால், இந்த சமயம் ஓய்வு எடுத்துக்கொள்வதை தாமே விரும்பி ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பதிவில் ’தனது ஷூக்களுக்கு மட்டுமே ஓய்வு, கிரிக்கெட்டின் மீதான தனது தீராக்காதலுக்கு என்றும் ஓய்வில்லை’ என்றும் உணர்ச்சி பூர்வமாக கூறி விட்டு, தன் ரசிகர்களுக்கும் தன்னை இவ்வளவு தூரம் உயர்த்திய இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும் நன்றி கூறி, ஒரே பதிவில் ஒட்டு மொத்த தனது ரசிகர்களையும் கண்கலங்க வைத்து விட்டார்.
இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய லசித் மலிங்கா அதில் 101 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இருக்கிறார். அது போக 226 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுகளும், மேலும் 84 டி20களில் விளையாடி 107 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். மேலும் இது போக ஐந்து ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் என்ற சாதனையையும் தன் வசம் வைத்துள்ளார்.
ஒரு ஓவரில் ஆறு பாலும் யார்க்கராக போட சொன்னால் கூட இந்த மனிதன் அசால்ட்டாக அதைச்செய்வார். 140 கி.மீ வேகத்தில் காலுக்கு இடையில் யார்க்கரை சொறுகி பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்து ஸ்டம்புகளை பறக்க விடுவதில் மலிங்கா கில்லாடி.
“ இந்த யார்க்கர் மன்னனின் யார்க்கரையும் அவர் பந்து வீசுகின்ற அந்த தனி ஸ்டைலையும் இனி உலக கிரிக்கெட்டில் காணமுடியாது என்கிற போது வருத்தமே என்றாலும் அவர் செய்த சாதனைகளைப்போற்றி புன்னகையுடன் வழி அனுப்பி வைப்பதே ஒரு நல்ல ரசிகனுக்கு சான்று என்பதை மனதில் கொண்டு, வாழ்த்தி உங்களை விடை பெறச்செய்கிறோம், லசித் மலிங்கா அவர்களே “