எம் எஸ் தோனி என்னும் கிரிக்கெட் சபாநாயகன்!
பெரும்பாலும் எம் எஸ் தோனி என்ற பேச்சு வரும் போதும், அவரின் சாதனைகள் குறித்து விளக்கும் போதும், எளிதாக சொல்லப்படும் வார்த்தைகள், அவருக்கு அதிர்ஷ்டம் இருந்திச்சு, அதுனால ட்ராபி அடிச்சிட்டாருன்னு எளிதாக சொல்லிவிடும் வழக்கம் பலரிடமும் இருக்கிறது.
ஆனால் அவர் இந்த நிலைமைக்கு வருவதற்காக, அவரின் வாழ்வின் இழந்தவைகளை பற்றியும், அதற்கு பின்னால் அவர் இட்டு இருக்கும் கடின உழைப்பை பற்றியும் யாரும் பேச முன்வரவில்லை. 12 மணி நேரம் வேலை அதற்கு பின் வலை பயிற்சி,ஸ்ட்ரீட் கிரிக்கெட், டென்னிஸ் பால் கிரிக்கெட் என தனது வாழ்வினை இரண்டு கோடுகளுக்கு மத்தியில் பிரித்து வைத்து வாழ்ந்து கொண்டு இருந்தார்.
அவரின் ஆர்வம் கிரிக்கெட் தான் என்றாலும் கூட, தனது வீட்டின் கடினமான சூழலை புரிந்து கொண்டு தனது பிடிக்காத ஒரு வேலையில் தொடர்ந்து பயணித்து வந்தார். ஒரு கட்டத்தில் இரண்டிலும் அவரால் பயணிக்க முடியவில்லை. இதிலா அதிலா என்ற குழப்பத்தோடு, அவரால் பிடிக்காத வேலையை நேசிக்கவும் முடியவில்லை, பிடித்த கிரிக்கெட்டை விடவும் முடியவில்லை.
இந்த இக்கட்டான சூழலில் தான், அவர் கிரிக்கெட்டை தெரிவு செய்ய தைரியமாக முடிவெடுத்தார். அவரது நண்பர்களும் அதற்கு செவி சாய்க்கவே தோனியின் கிரிக்கெட் பயணத்திற்கு அவர்களும் துணைபுரிய ஆரம்பித்தனர். அன்று தான் ஒரு கதாநாயகன் உருவாக ஆரம்பித்தான். தொடர்ச்சியான கடினமான உழைப்பிற்கு பின்னர் இந்திய அணிக்கு தேர்வான தோனியின் ஆரம்ப காலக்கட்ட பெயர் சிக்ஸர் மன்னன்.
முழுக்க முழுக்க அதிரடி பேட்ஸ்மேனாகவே வலம் வந்த தோனிக்கு ஒரு கட்டத்தில் இந்திய அணியை தலைமை வகிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அன்றைய சீனியர்களாக அறியப்பட்ட சேவாக், சச்சின், காம்பீர், யுவராஜ் என யாருமே அன்றைய இந்திய அணிக்கு, கேப்டனாக பொறுப்பேற்க முன்வராத நிலையில், தோனிக்கு பிசிசிஐ கேப்டன் பொறுப்பை வழங்கியது.
தான் நினைத்து இருந்தால் வெறும் அதிரடி பேட்ஸ்மேனாக மட்டுமே வலம் வந்து, காலம் முழுக்க சுயசாதனைக்காக விளையாடி இருக்கலாம். ஆனால் தைரியமாக தலைமைப் பொறுப்பை ஏற்று இந்திய அணிக்கு 2007 யில் ஒரு டி20 உலக கோப்பை, 2011 யில் ஒரு ஒரு நாள் போட்டி உலக கோப்பை, ஒரு சாம்பியன் ட்ராபி என இந்திய அணியையும் ரசிகர்களையும் கோப்பைகளால் குளிர்வித்தார்.
” அவர் கேப்டனாக பதவி வகித்த காலத்தில் தான் இந்திய அணி, ஒரே சமயத்தில் அனைத்து பார்மட்களிலும் நம்பர் ஒன் இடத்தில் இருந்தது, அனைத்தையும் அதிர்ஷ்டத்தால் பெற கடவுளால் கூட முடியாது. அந்த வகையில் தோனியை ஒரு கிரிக்கெட் சபாநாயகன் என அறிவிப்பதில் மிகை எல்லாம் எதுவும் இல்லை “