செக்யூரிட்டி டு கிரிக்கெட்டர், யார் இந்த ஷமர் ஜோசப்?
செக்யூரிட்டியாக பணியாற்றி விட்டு, தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் பிளேயிங் 11 கிரிக்கெட்டராக உருவெடுத்து இருக்கும் இந்த ஷமர் ஜோசப் என்பவர் யார்? இவரது கிரிக்கெட் வாழ்க்கை எங்கிருந்து துவங்கியது?
குயானாவில் 12 மணி நேரம் செக்யூரிட்டி வேலை பார்த்து பிழைப்பு நடத்திய ஒரு தினக்கூலி தான் இந்த ஷமர் ஜோசப். ஏழ்மை காரணமாக வேலை நேரம் போக கிரிக்கெட் வலை பயிற்சி மேற்கொள்ளும் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு 2 மணி நேரம் பந்து வீசுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அது அவரின் பார்ட் டைம் ஜாப் ஆக இருந்து இருக்கிறது. அங்கிருந்த ஒரு சிலர் அவரின் அசாத்திய பந்து வீச்சைக் கண்டு அவரின் கிரிக்கெட் ஆர்வம் குறித்து கேட்டு இருக்கின்றனர்.
ஆனால் அவரோ ’எனக்கு இது ஒரு வேலை, என் ஏழ்மை காரணமாகவே இங்கு ஒரு 2 மணி நேரம் பணி புரிகிறேன்’ என்று சொல்லிவிட்டு கிளம்பி இருக்கிறார். தொடர்ந்து அவரை பாலோ செய்த ஒரு சிலர், அவரின் திறமைக்கு பரிசாக, அவரை குயானா கிரிக்கெட் அணிக்காக விளையாட சம்மதம் வாங்கி இருக்கின்றனர். தனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என துளி கூட எதிர்பாராத ஷமர் ஜோசப், தனது முதல் முதல்தர போட்டியிலேயே ஆறு விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தி இருக்கிறார்.
இதுவரை ஆறு முதல் தர போட்டிகளில் விளையாடி இருக்கும் ஷமர் ஜோசப் இரண்டு ஐந்து விக்கெட்டுக்கள் உட்பட மொத்தம் 21 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருக்கிறார். தற்போது இரண்டு தினங்களுக்கு முன்பு, பிரசித்தி பெற்ற அடிலெய்டு மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தனது முதல் சர்வதேச அறிமுக டெஸ்ட் போட்டியை ஆடினார். முதல் போட்டியிலேயே ஆண்டை அணியாக கருதப்படும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக, 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களை இவர் யார் என்று தேட வைத்து இருக்கிறார். இது போக அவரது முதல் விக்கெட் உலகின் நட்சத்திர வீரராக அறியப்படும் ஸ்டீவன் ஸ்மித் என்பது இன்னமும் பெருமைக்குரியது. பேட்டிங்கிலும் சிறப்பாகவே செயல்படுகிறார். இன்னும் மெருகேற்றினால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலிக்க நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது.
“ தங்கம் கோட்டையில் இருந்தாலும் குடிசையில் இருந்தாலும் தங்கமே, என்ன அது கண்டு எடுக்கப்பட வேண்டும் அவ்வளவு தான், அந்த வகையில் ஷமர் ஜோசப் குயானாவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு தங்கம் “