இந்த சம்பவம் நிச்சயம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத சம்பவமாக நிலைத்து நிற்கும்!
223 ரன்கள் ராஜஸ்தானுக்கு இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா, அதிரடி காட்டினாலும் ராஜஸ்தான் வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டுக்களை பறிகொடுத்த வண்ணம் இருந்தனர். சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா என கொல்கத்தா பவுலர்கள் ராஜஸ்தான் அணியின் வீரர்களை திணறடித்துக் கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் ஒரே ஒருவர் மட்டும் விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் நங்கூரம் போட்டுக் கொண்டு இருந்தார்.
ஒரு கட்டத்தில் 36 பந்துகளில் 96 ரன்கள் தேவை, யாருக்குமே ராஜஸ்தான் ஜெயிக்கும் என்று துளி கூட நம்பிக்கை இல்லை, கொல்கத்தா அணியின் ஹோம் கிரவுண்ட் என்பதால் ஒவ்வொரு விக்கெட்டிற்கும் கொல்கத்தா அணி ரசிகர்களின் சத்தம் விண்ணை பிளந்து கொண்டு இருந்தது. அங்கிருந்து ஆரம்பித்தது தான் பட்லரின் அதிரடி. 36 பந்துகளில் 50 போட்டவர், அடுத்த 20 பந்துகளில் 59 ரன்கள், கொல்கத்தா அணியின் அத்துனை நட்சத்திர பவுலர்களின் பந்து வீச்சையும் ஈடன் கார்டனின் நாலா பக்கமும் சிதறடித்துக் கொண்டு இருந்தார்.
ஒட்டு மொத்த ஈடன் கார்டனும் கொல்கத்தா ரசிகர்களின் ஆரவாரத்தால் நிரம்பி இருக்க, ஒரே ஒருவன் அத்துனை ரசிகர்களின் ஆரவாரத்தையும் அமைதி ஆக்கினான். ஐபிஎல் வரலாற்றில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு இது. இதுவரை சேஸிங்கில் மூன்று முறை சதம் அடித்து கலக்கி இருக்கிறார் ஜோஸ் பட்லர். ஒட்டு மொத்தமாக ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 7 சதங்கள் அடித்து இருக்கிறார்.
“ அனைவரும் அடித்துக் கொண்டு இருக்கும் போது தானும் ஒரு குருட்டடி அடித்து விட்டு வருவோம் என்பது பெயராகாது, சாதனை ஆகாது, அணியே திணறிக் கொண்டு இருக்கும் போது, தனி ஆளாய் நின்று, போராடி, அணியை தூக்கி நிறுத்தி, வெற்றி பாதைக்கு அழைத்து செல்வது என்பதே பெயராகும், சாதனையாகும், அந்த வகையில் ஜோஸ் பட்லர் ஒரு சாதனையாளன் “