ஒரு வயது குழந்தைக்கு நுரையீரல் மாற்று அறுவைச்சிகிச்சை புரிந்து உலகச்சாதனை படைத்த மருத்துவர்கள்!
சென்னையில் ஒரு வயது மட்டுமே நிரம்பிய குழந்தை ஒன்றுக்கு பிறப்பிலேயே நுரையீரல் குறைபாடு இருந்தது அறியப்பட்டது. தற்போது அக்குழந்தைக்கு நுரையீரல் மாற்று அறுவைச்சிகிச்சை மூலம் இரண்டு நுரையீரலையும் மாற்றி உலகச் சாதனை படைத்து இருக்கின்றனர் சென்னை மருத்துவக்குழுவினர்.
சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் ஒரு வயது குழந்தை ஒன்று பிறவியிலேயே ஆக்சிஜன் செறிவுத்திறன் குறைபாட்டுடன் அனுமதிக்கப்பட்டிருந்தது. பரிசோதித்ததில் இரண்டு நுரையீரல்களும் மாற்றினால் மட்டுமே குழந்தை பிழைக்க இயலும் என்ற நிலை இருந்ததாக கூறப்படுகிறது. பெரியவர்களுக்கே மாற்று அறுவைச்சிகிச்சைக்கு உடல் உறுப்புகள் உடனடியாக கிடைக்கும் சூழல் இங்கு இல்லாத நிலையில், இது வேறு சிறு குழந்தை எப்படி தயார் செய்வது என்று மருத்துவர்கள் யோசித்து கொண்டிருந்த நிலையில் தான், மூளைச்சாவு அடைந்த ஒரு குழந்தையின் நுரையீரல்கள் தானமாக மருத்துவர்களுக்கு கிட்டியது.
அதற்கு பின்னர் எம்.ஜி.எம் மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவைச்சிகிச்சை பிரிவின் துறை இயக்குநர் டாக்டர் கே.ஆர்.பால கிருஷ்ணன் மற்றும் இணை இயக்குநர் டாக்டர் சுரேஷ் ராவ் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் அறுவைச்சிகிச்சையில் ஈடுபட்டனர். பச்சிளம் குழந்தை என்பதால் ஒரு மிகப்பெரும் சவாலையே அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. திறம்பட செயல்பட்டு வெற்றிகரமாக நுரையீரலை இணைத்து இரண்டு நுரையீரலையும் இயங்க வைத்து உலகச்சாதனை புரிந்திரிக்கின்றனர் எம்.ஜி.எம் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். தற்போது அந்த குழந்தை அவசரச்சிகிச்சை பிரிவில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
“ ஒடி ஆடி சேட்டைகள் புரிய வேண்டிய குழந்தையை வென்டிலேட்டரில் வைத்து வேடிக்கை பார்த்தது விதி. அந்த விதியையே தகர்த்து அக்குழந்தைக்கு அதன் உயிரை திரும்ப கொடுத்து ’இந்த உலகத்தில் நீ இன்னும் பார்க்க வேண்டியது நிறையவே இருக்கிறதடா’ என்று காப்பாற்றி அனுப்பி இருக்கின்றனர் கடவுளாகிய மருத்துவர்கள் “