பள்ளி,கல்லூரிகள் திறக்க அனுமதி – தமிழக அரசு
கொரோனோ காலம் உலகத்திற்கே துன்ப காலம் என்றாலும் ஒரே ஒரு இனத்திற்கு மட்டும் அது இன்ப காலம். அது வேறு எந்த இனமும் அல்ல நம் மாணவர் இனம் தான். இணைய வழிக்கல்வி என்று கடந்த இரண்டு வருடங்களாக புத்தகங்களையே மறந்து இருக்கிறார்கள். தற்போது அவர்களுக்கு தலையில் அம்மிக்கல்லை தூக்கி தலையில் போட்டாற்போல ஒரு கசப்பான செய்தி வந்திருக்கிறது. அது தான் செப்டம்பர் 1 முதல் 9,10,11 மற்றும் 12 வகுப்புகளுக்கும் கல்லூரிகளுக்கும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
பெற்றோர்கள்,மருத்துவ வல்லுநர்கள் என்று பலரின் நீண்ட ஆலோசனைக்கு பிறகே செப்டம்பர் 1 முதல் பள்ளி, கல்லூரி திறப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் முதல் கீழ் நிலை பணியாளர்கள் வரை அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு வகுத்துள்ளது. சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தவும் தமிழக அரசு அனுமதித்துள்ளது. மேலும் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் திறப்பது குறித்து செப்டம்பர் 15 அன்று முடிவெடுக்கப்படும் என்றும் அறிக்கை விடுத்துள்ளது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கொரோனோ கட்டுப்பாடுகள் முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் 50 சதவிகித மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துங்கள் என்றும் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. செப்டம்பர் 1-ற்கு இன்னமும் 10 நாள் தான் இருக்கிறது மாணவச்செல்வங்களே! தூக்கி போட்ட புத்தகங்கள் நோட்டுகள் என்று எல்லாவற்றையும் தேடி வையுங்கள்.
“ இரண்டு வருடங்கள் கொரோனோவை கடவுளாக வழிபட்ட மாணவர்கள், இனி சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநரை செய்திகளில் எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பார்கள் “