இருபது நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னமும் வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து மீளாத திருநெல்வேலி தூத்துக்குடி கிராமங்கள்!

Thamirabarani Flood Innum Meeladha Gramangal Fact Here Idamporul

Thamirabarani Flood Innum Meeladha Gramangal Fact Here Idamporul

தாமிரபரணியில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு திருநெல்வெலி, தூத்துக்குடி மாவட்ட கிராமங்களின் இயல்பு வாழ்க்கையை நிலைகுலைய செய்து இருக்கிறது.

கடந்த டிசம்பர் 18 அன்று தாமிரபரணியில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும் கூட இன்னமும் கிராமங்கள் மீளாத நிலையில் தான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் இடிந்த வீடுகள், துண்டிக்கப்பட்ட சாலைகள், இன்னமும் ஆங்காங்கே தெருக்களில் சூழ்ந்து கிடக்கும் வெள்ள நீர், ஆங்காங்கே தினமும் 6 மணி நேரத்திற்கு மேல் கட் செய்யப்பட்டும் மின்சாரம், எப்படி நீரை வெளியேற்றுவது என தெரியாமல் அதே சூழலோடு வாழ பழகி கொண்ட ஒரு சில கிராம மக்கள் என்று சொல்லுவதற்கே மனம் கணக்கிறது.

இன்னமும் சரி செய்யப்படாத மின்கம்பங்கள், ஆங்காங்கே பாதுகாப்பற்ற நிலையில் சரிந்து காணப்படும் அரசு சம்பந்தப்பட்ட கட்டிடங்கள், முடங்கிய சொந்த தொழில்கள் என்று மக்கள் ஒவ்வொரு நாளையும் கடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எப்போதும் களைகட்டும் திருநெல்வேலி ஜங்ஸனில் வெள்ளத்தின் போது 12 அடிக்கு தண்ணீர் சூழந்தது. அங்கு இருக்கும் அனைத்து கடைகளும் சேதத்திற்கு உள்ளானதால் இன்னமும் கடைக்கு சொந்தகாரர்கள் அந்த பெரும் இழப்பில் இருந்து மீள முடியாமல் கடைகளை அடைத்தே வைத்து இருக்கின்றனர். இதனால் 24 மணி நேரமும் மிளிறும் திருநெல்வேலி ஜங்ஸன் முழுவதுமாக பொலிவிழந்து நிற்கிறது.

திருவைகுண்டத்தில் ஹெலிகாப்டரில் வந்து ஒரு கர்ப்பிணி பெண்ணை மீட்டதை ட்ரெண்ட் ஆக்கிய ஒரு சில மீடியாக்கள், அந்த பெண் மீட்கப்பட்ட அதே பகுதியில் இருக்கும் திருவைகுண்டம் மற்றும் அதை சுற்றி இருந்த அரசு மற்றும் பொது சுகாதார மருத்துவமனைகளில் அதே தினத்தில் 36 கர்ப்பிணிகள் சிக்கிக் கொண்டு தவித்ததை துளி செய்தியாக கூட கூறவில்லை. ஆயிரம் பேர் இருந்த ரயிலை மீட்டதை ட்ரெண்ட் ஆக்கிய ஒரு சில மீடியாக்கள், அதே பகுதியில் அதே இடத்தை சுற்றி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மக்கள் 10 அடிக்கும் மேல் புகுந்த வெள்ள நீரால் தத்தளித்ததை யாரும் கூறவில்லை.

திருநெல்வேலி, தூத்துக்குடி கிராமங்களின் நீர்வளம் என்பது தாமிரபரணி மட்டும் அல்ல, கிராமங்களை சுற்றி இருக்கும் குளங்களும், ஏரிகளும், கம்மாய்களும் தான், ஆனால் இவ்வளவு மழை பெய்தும் கூட இன்று அந்த பெரும்பாலான குளங்களிலும், கம்மாய்களிலும் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்பது அனைவரையும் வியக்க வைக்கிறது. அத்தனை குளங்களிலும் உடைப்பு, அத்தனை கம்மாய்களிலும் உடைப்பு, நாளை நீர் ஆதாரத்திற்கு அந்தந்த கிராமங்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதும் கேள்விக்குறி.

இன்னும் இங்கு இருக்கும் ஒவ்வொரு தனிமனித வாழ்வும் இதில் இருந்து மீள்வதற்கு இரண்டு வருங்களாவது ஆகும். ஆனால் அது வரை மழையோ, ஆறுகளோ காத்து இருக்காது. அடுத்த வருடமும் இதே நிலை வரலாம். அரசு என்ன செய்ய போகிறது என்பது தான் இங்கு அனைவரும் கேட்கும் கேள்விகளாக இருக்கிறது. கொடுக்கப்படும் ஆறாயிரம் ரூபாய் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டிடாது. தாமிரபரணியின் பெரும்பாலான் கரைகள் இன்னமும் மண்கரைகளாகவே இருக்கிறது. நிச்சயம் கரைகளை ஒரு வருடத்திற்குள் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. குளம், கம்மாய்களின் உடைப்புகள் சரி செய்யப்பட்டு நிச்சயம் அனைத்தும் தூர்வாறப்படவும் வேண்டும்.

ஒட்டு மொத்த தாமிரபரணியும் கடைசியாக சென்று முட்டும் இடமான திருவைகுண்டத்தின் பாலத்தையும், அணையையும் பரிசோதிக்க வேண்டிய நிலை நிச்சயம் இருக்கிறது. நாளை ஏதும் பேரிடரில் அந்த அணையிலோ பாலத்திலோ உடைப்பு ஏற்பட்டால் நிச்சயம் பல ஊர்கள் நீரில் ஒட்டு மொத்தமாக மூழ்கும் அபாயம் இருக்கிறது. இதனால் பல உயிர் சேதமும் வர வாய்ப்பு இருக்கிறது. அரசு நிச்சயம் இதையெல்லாம் கவனித்தில் கொண்டு நல்லதொரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

“ நகரவாசிகள் வெள்ளத்தில் சிக்கும் போது நிமிடத்திற்கு ஒரு அப்டேட் கொடுக்கும் மீடியாக்கள், இருபது நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னமும் மீளாத தூத்துக்குடி, திருநெல்வேலி கிராமங்கள் குறித்து இன்னமும் எந்த வித அப்டேட்டும் கொடுக்காதது தான் இங்கிருக்கும் மக்களின் பெரும் வருத்தமாக இருக்கிறது ”

About Author