கணவன் மீது போலி பாலியல் வழக்கு, மனைவிக்கு 5 ஆண்டு சிறை!
பொய்யான ஆதாரங்களை உருவாக்கி கணவன் மீது போலி பாலியல் வழக்கு தொடுத்த மனைவிக்கு 5 ஆண்டு சிறை.
கடந்த 2019 அன்று சென்னை கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரு வழக்கு வருகிறது. அதாவது தனது 14 வயது மகளை தனது கணவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியதாக மனைவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். மனைவி கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிக்க ஆரம்பித்த காவல்துறைக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
அதாவது கணவர் மனைவி இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாகவே கருத்து வேறுபாடு இருந்து இருக்கிறது. இதனை மனதில் வைத்துக் கொண்டு கணவரை பழி வாங்க நினைத்த மனைவி, தன் கணவர் தன் மகளை பாலியல் துன்புறுத்துதலுக்கு உள்ளாக்கியதாக புகார் ஒன்றை ரெடி செய்து விட்டு அதற்கேற்றவாறு போலியான மருத்துவ ஆதாரங்களையும் திரட்டி இருக்கிறார்.
காவல்துறை புகாரை தீர விசாரித்து ஆதாரங்களின் உண்மை தன்மையை ஆராய்ந்த போது அனைத்தும் போலி என தெரிய வந்து இருக்கிறது. வழக்கு நீதிமன்றம் செல்லவே, ஆதாரங்களின் அடிப்படையில், வழக்கு புனையப்பட்டதை உணர்ந்து, நீதிபதி அந்த பெண்ணுக்கு போக்சோ பிரிவின் கீழ் கணவன் மீதே பொய் வழக்கு தொடர்ந்ததற்காக, 6000 ரூபாய் அபராதமும், 5 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து இருக்கிறார்.
“ ஆண்களின் மீது எளிதாக பெண்களால் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விட முடிகிறது. சட்டமும் பெரும்பாலும் பெண்களுக்கு ஆதரவாகவே இருப்பதால் ஆண்கள் சட்டத்தின் முன் எதையும் நிரூபிக்க முடியாத ஊமை ஆகி விடுகின்றனர். ஆனாலும் இந்த வழக்கில் பொறுத்து, தீர விசாரித்து உண்மையை வெளிக்கொணர்ந்த காவல் துறைக்கும், சரியான தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கும் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் “