நான் ஒரு போதும் நீட் மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் – ஆளுநர் ரவி
நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி ‘நான் ஒரு போதும் நீட் மசோதாவில் கையெழுத்திட மாட்டேன்’ என கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு தோல்வி காரணமாக நடைபெறும் தற்கொலைகள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது கூட ஜெகதீஸ்வரன் என்ற மாணவரும் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றனர். ஆனாலும் நீட் மசோதாவில் ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் ரவி விடா பிடியாய் இருந்து வருவது வருத்தத்தை அளிப்பதாக இருக்கிறது.
மக்கள் நலனுக்காக தான் அரசு, இங்கு ஒவ்வொரு மாநிலத்திலும் கல்வி முறை ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. அப்படி இருக்கும் போது அனைவருக்கும் பொதுவாக நீட் என்னும் தேர்வை வைத்து மாணவர்களை தேர்ந்து எடுப்பது என்பது எப்படி சாத்தியமாகும். இலட்சக் கணக்கில் கொடுத்து தனியாக நீட் தேர்விற்கு கோச்சிங் செல்பவர்களால் மட்டுமே நீட்டை வெல்ல முடியும் என்றால் மருத்துவத்தின் நாளைய எதிர்காலம் பெரிய பிசினஸ் போல தான் இருக்கும்.
“ கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து நீக்கி, மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வந்தால் நீட் போன்ற உயிர்கொல்லி தேர்வுகளுக்கு ஒரு முடிவைகொண்டு வர முடியும். இல்லையேல் மருத்துவம் வெகுவிரைவில் தலை சிறந்த பிசினஸ் ஆகிவிடும் என்பதில் ஐயமில்லை. “