மதுரை என்றாலே வீரம் என்று சொல்வார்கள், ஆனால் அதன் தொன்மை குறித்து உங்களுக்கு தெரியுமா?
உலகின் மிகப்பழமையான நாகரீகம் என்பது யூப்ரடிஸ் மற்றும் டைகரிஸ் ஆறுகளுக்கு இடையிலான ஈராக்கின் மெசபடோமியா நாகரீகம் என்று தான் வரலாறு கூறுகிறது. அது கிட்ட தட்ட 6500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் அதற்கும் பழமையான நாகரீகங்கள் எல்லாம் நம் தமிழ் நாகரீகத்தில் இருக்கின்றன என்பதற்கான சான்றுகள் கொஞ்சம் கொஞ்சமாக தொல்லியல் ஆய்வில் கிடைத்து வருகின்றன.
கூடல் நகர், தூங்கா நகரம் என்றெல்லாம் அழைக்கப்படும் மதுரை கிட்டதட்ட 10,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்க கூடும் என்று கீழடியில் கிடைத்த ஒரு சில சான்றுகளின் மூலம் தெரிய வருகின்றது. பண்டைய காலத்தில் மதுரையை பாண்டியர்களும், சோழர்களும், களப்பிரர்களும் ஆண்டு வந்தனர். சங்க கால பாண்டியர்கள் இஸ்ரேல், ரோம் உள்ளிட்ட வெளிநாடுகள் வரை தங்கள் நல்லுறவுகளை மேம்படுத்தி வந்தார்களாம்.
பாண்டியர்களின் துறைமுகநகரமான கொற்கைக்கு அருகே உள்ள உவரியில் இருந்து பண்டைய கால இஸ்ரேல் அரசன் ஆன சாலமோன் முத்துக்களை இறக்குமதி செய்து கொண்டதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இது போல பல வெளிநாட்டு நாணயங்கள் எல்லாம் மதுரையில் அச்சடிக்கப்பட்டதாம். குறிப்பாக ரோம் அரசு தங்கள் நாட்டு நாணயத்தை அச்சடிக்க, மதுரையில் தொழிற்சாலை வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
மதுரையின் தொன்மைக்கு கிரேக்க வரலாற்று ஆசிரியர் மெகஸ்தனிஸ் எழுதிய பயணக்குறிப்புகளும், சந்திர குப்த மெளரியரின் அமைச்சரான சாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திரங்களும், சங்க கால தமிழ் இலக்கியங்களும், தற்காலத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய அகழாய்வின் மூலம், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களும் சான்றாக அமைகின்றன.
“ உலகின் தொன்மையான நாகரீகம் என்பது தமிழ் நாகரீகம் தான் என்பதை விளக்க இன்னும் எத்துனையோ சான்றுகள் மண்ணுக்கடியிலும், கடலுக்கடியிலும் பொதிந்து கிடக்கின்றன. அவைகளை எல்லாம் தோண்டி எடுத்தால் தமிழ் நாகரீகத்தின் பெருமையை மீட்டெடுக்கும் ஒரு வாய்ப்பாக அது அமையும் “