மே 18 | ‘தமிழ் இனப்படுகொலை நாள், மறக்க முடியுமா, இன்னும் இதயத்தில் அந்த ரத்தக்கறை பலருக்குள்ளும் இருக்க தான் செய்கிறது’
தாயகக் கனவை கையில் ஏந்தி போராடிய இலட்சக்கணக்கான தமிழ் இன மக்களை சிங்கள பேரினவாதம் படுகொலை செய்த நாள், இந்நாள்.
கருவினில் பிள்ளை, களத்தினில் கணவன், ஒரு நாள் முழுக்க போராட வேண்டும் ஆனால் தெம்புக்கு உள்ளிருப்பதோ குடித்த ஒரு வாய் கஞ்சி தான். இது அன்று தாயகத்திற்காக களத்தில் நின்ற ஒரு வீரனின் நிலை. இது ஒரு வீரனின் நிலை மட்டும் அல்ல, அங்கு தாயகத்திற்காக போராட கூடி இருந்த ஒவ்வொரு தமிழனின் நிலை. வாழ்வதற்கே போராட்டம் என்ற நிலை இருந்தாலும் தாயகத்திற்காக களத்தில் நிற்பேன் என்று மனதுறுதியோடு போராடி உயிர் நீத்த நம் இனத்தின் வீரத்தை தியாகத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட இயலாது.
சுற்றி எங்கும் குண்டு மழை, சிதறிக்கிடக்கும் உடல்கள், எங்கும் இரத்த சகதிகள், மண்ணில் சிந்தியும் தாயகத்திற்காக கொதித்துக் கொண்டு இருந்த குருதிகள், ஒரு பேரினவாதம் உலக நாடுகளின் உதவியோடு ஒரு தமிழினத்தை வீழ்த்தியதாக அன்று நினைத்துக் கொண்டு இருந்தது. இருக்கிறது. அவர்களுக்கு தெரியாது ’தமிழுக்கும் தமிழனுக்கும் உரித்தான சுபாவம் வீழ்ந்தால் வீழ்ந்த இடத்திலேயே எழுவது தான்’ என்பது. இன்னமும் குருதிகள் கொதித்துக் கொண்டு தான் இருக்கிறது. இணையும் கைகள் ஒரு நாள் வீறு கொண்டு எழும்.
“ உலக நிலப்பரப்புகளை எல்லாம் கட்டி ஆண்ட தமிழனை, ஒரு நிலப்பரப்பின் பேரினவாதம் உலக நாடுகளை எல்லாம் சேர்த்து கூட்டி கொன்றதாய் சரித்திரம் இருக்கலாம். ஆனால் அத்துனை நாடுகள் ஒன்று சேர்ந்தும் கூட தன் உரிமையை தன் தாயகத்தை விட்டுக்கொடுக்காமல் உயிரை விட்டுக்கொடுத்த என் தமிழினத்தின் வீரமும் தியாகமும் எங்கள் சரித்திரத்திலும் என்றும் இருக்கும் “