பிரபல மீடியா செய்தியாளருக்கு 65 இடங்களில் வெட்டு, தமிழகத்தில் கருத்துரிமை பறிபோகிறதா?
குடித்து விட்டு காவல்துறையினரிடம் சண்டையிட்டவர்களை செய்திகள் மூலம் வெளிக்கொணர்ந்த செய்தியாளரை கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல், இந்நிகழ்வு தமிழகத்தின் கருத்துரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
திருப்பூர் பல்லடம் பகுதியில் நியூஸ் 7 செய்திகள் சேனலின் செய்தியாளராக 7 வருடங்களாக பணிபுரிந்து வருபவர் தான் நேசபிரபு. சமீபத்தில் பல்லடம் பகுதியில் குடித்துவிட்டு காவல்துறையினரிடம் தகராறு செய்த ஒரு கும்பலை செய்திகள் மூலம் வெளிக்கொணர்ந்து இருக்கிறார். தொடர்ந்து அந்த கும்பல் இவரை பின் தொடர்ந்து மிரட்டி கொண்டே இருந்து இருக்கிறது.
சம்பவம் நடந்த தினத்தன்றும் அந்த கும்பல் இவரை ஆங்காங்கே வழிமறித்து வேண்டாத கேள்விகள் எல்லாம் கேட்டு மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசிக் கொண்டே இருந்து இருக்கின்றனர். நேசபிரபு அந்த கும்பலிடம் இருந்து தப்ப தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்து இருக்கிறார். பல்லடம் காவல் துறைக்கும் பலமுறை கால் செய்து தொடர்ந்து தன்னை ஒரு கும்பல் துரத்துவதை சொல்லிக் கொண்டே இருந்து இருக்கிறார்.
ஆனாலும் பல மணி நேரம் ஆகியும் கூட நேசபிரபுவை அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்ற எந்த ஒரு காவல் துறையும் வரவில்லை என கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அந்த கும்பலால் மறிக்கப்பட்டு அடித்து இழுத்துச் செல்லப்பட்ட நேசபிரபுவை சுற்றி வளைத்து அந்த கும்பல் 65 இடங்களில் கோரமாக வெட்டி இருக்கிறது. கைகள், கால்கள், நெஞ்சம் என எல்லா இடங்களிலும் ஆழமான காயங்கள் இருப்பதால் தொடர்ந்து நேசபிரபு தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
“ செய்திகள் என்பதே உண்மைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் ஒரு கருவி, அத்தகைய கருவியாக உண்மையை ஆராய்ந்து வெளிப்படுத்தும் ஊடகவியலார்களுக்கே இங்கு பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு தனிமனிதனின் கருத்துரிமையையும் இங்கு கேள்விக்குறியாக்கி இருக்கிறது “.