எல்லை மீறும் இலங்கை கடற்படையின் அராஜகம், மேலும் ஒரு தமிழக மீனவர் பலி!
இலங்கை கடற்படையினர், தொடந்து அராஜக செயலுடன் தமிழக மீனவர்கள் மீது தாக்குதலை நடத்தி வருவது வழக்கமாகி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தை சேர்ந்த ராஜ் கிரண்(30), சுகந்தன்(23), ஆரோக்கிய சேவியர்(32) ஆகியோர் மீன் பிடிப்பதற்காக நடுக்கடலுக்குள் சென்ற போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களின் படகுகளை இடித்தும், துப்பாக்கி சூடு நடத்தியும் அவர்களை அச்சுறுத்தியதாக தெரிகிறது. இந்த தாக்குதலுக்கு பயந்து கடலில் குதித்த ராஜ்கிரண் சம்ப இடத்தில் இறந்ததாக கூறப்படுகிறது. சுகந்தன் மற்றும் ஆரோக்கிய சேவியர் மட்டும் கைது செய்யப்பட்டு இலங்கை கப்பற்படையின் கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
கடந்த ஜனவரியில் இது போலவே ராமநாதபுரத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் டார்வின்(28), மேஷியா(30), நாகராஜ்(52), செந்தில் குமார்(32) இலங்கை கப்பற்படையின் அராஜகத்தால் பரிதாபமாக பெருங்கடலில் பிணமாக மீட்கப்பட்டனர். கிட்ட தட்ட இந்த சம்பவம் நடந்து 9 மாதங்கள் ஆகிறது. இன்னமும் விசாரணையில் எந்த துப்பும் துலங்கவில்லையாம். தற்போது ராஜ்கிரணின் உயிரிழப்பிற்கும், இது போலவே விசாரணை மட்டுமே நடக்கும், நீதி கிடைக்காது என்று சமூக ஆர்வலர்கள் பலரும் இணையத்தில் கொந்தளித்து வருகின்றனர்.
” மாநில அரசு தொடர்ந்து கண்டனம் மட்டுமே தெரிவித்து கடிதம் எழுதிக் கொண்டு இருக்கிறது. ஒன்றிய அரசு இந்தியப்பெருங்கடலில் மிதந்து கொண்டிருக்கும் தமிழக மீனவர்களின் பிணங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது. ஆக மொத்தம் நீதியும் இல்லை, கேட்க நாதியும் இல்லை. என்பது தான் இங்கு பெரும்பாலான ஆர்வலர்களின் புலம்பல் “