80 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த திருவண்ணாமலை இளைஞர் கைது!
கிட்ட தட்ட 80 பெண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து நகை பணங்களை பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த திருவண்ணாமலை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
தஞ்சாவூரில் வசிக்கும் சாந்தி என்ற பெண், சக்கரவர்த்தி என்ற இளைஞர் மேட்ரிமோனி மூலம் பழகி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நகைகளை பறித்து விட்டார் என காவல் துறையில் புகார் கொடுக்கிறார். புகாரை விசாரித்த காவல் துறை ஜாபர் சித்திக் தலைமையிலான தனிப்படை ஒன்று அமைத்து சக்கரவர்த்தியை தேடிய போது, கடைசியாக அவர் திருவிடைமதூரில் பிடிபட்டு இருக்கிறார்.
அவரை கைது செய்து, அவரது கைப்பேசியை கைப்பற்றி, அதில் இருக்கும் தகவல்களை ஆராய்ந்த போது, அவர் ஏமாற்றியது சாந்தியை மட்டும் அல்ல, சாந்தி போல பல பெண்களை ஏமாற்றி பணம், நகைகளை பறித்து இருப்பதும் தெரிய வந்தது. குறிப்பாக மேட்ரிமோனியில் இரண்டாவது திருமணத்திற்காக பதிந்து வைத்து இருக்கும் பெண்களை குறிவைத்து தனது சித்து வேலையை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்தது. கிட்டதட்ட 80 பெண்களுக்கும் மேல் அவரது வலையில் சிக்கி இருப்பதாக முதல் தர விசாரணையில் தெரிய வந்து இருக்கிறது.
“ பாதிக்கப்பட்ட அத்துனை பேரையும் விசாரிக்கும் பட்சத்தில், சக்கரவர்த்தி குறித்து இன்னும் ஒரு சில திடுக்கிடும் உண்மைகள் வெளிவர வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது “