ட்ரென்ட் ஆன ’ரிஜக்ட் Zomato’ ஹேஸ்டாக், மன்னிப்பு கேட்டு தவறை திருத்திக் கொண்ட நிறுவனம்!
’ஹிந்தி தேசிய மொழி, அதை குறைந்தபட்சமாவது அனைவரும் அறிந்திருக்க வேண்டும்’ என்று தன்னை தொடர்பு கொண்டு பேசிய வாடிக்கையாளர் ஒருவரிடம், எகத்தாளம் பேசிய தமிழக சார்பு Zomato நிறுவனத்திற்கு தகுந்த பாடம் புகட்டி, அடி பணிய வைத்திருக்கின்றனர் தமிழக இணையவாசிகள்.
விகாஸ் என்பவர், ’நான் ஆர்டர் செய்த உணவு வரவில்லை, ஆதலால் ஹோட்டலை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொண்டு, நான் செலுத்திய பணத்தை திருப்பி தாருங்கள்’ என்று Zomato நிறுவனத்தை, சேட் சப்போர்ட் மூலம் தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்துள்ளார். மறுபக்கம் பேசிய Zomato எக்ஸ்கியூட்டிவோ ‘ஹோட்டலை 5-க்கும் மேற்பட்ட முறையில் தொடர்பு கொண்டோம். மொழி பிரச்சினை இருப்பதால் கொஞ்சம் பொறுமை கொள்ளுங்கள்’ என்று கூறி இருக்கிறார். அதாவது அந்த Zomato ஊழியர் தமிழ் அறிந்திருக்கவில்லை, அதன் காரணமாக அவரால் ஹோட்டலிடம் சரியான முறையில் விளக்கத்தை பெற முடியவில்லை.
அதற்கு பதில் அளித்த விகாஸ், ‘தமிழகத்தில் இருக்கும் ஒரு Zomato நிறுவனத்தில் வேலைக்கு ஆள் எடுக்கிறீர்கள் என்றால், அவருக்கு அந்த மாநிலத்தின் மொழி கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம் அல்லவா’ என்று எதிர் விவாதம் வைத்திருக்கிறார். மறுமுனையில் அந்த Zomato Chat எக்ஸ்கியூட்டிவ் ‘உங்களுக்கு நான் தரும் ஒரு அன்பான தகவல் என்னவென்றால், ஹிந்தி தேசிய மொழி, அதை குறைந்தபட்சமாவது அனைவரும் அறிந்திருக்க வேண்டும்’ என்று எகத்தாளமாய் பதில் அளித்துள்ளார். இதை விகாஸ் ஒட்டு மொத்தமாக தனது ட்விட்டர் பக்கத்தில் சேர் செய்ய பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. ‘தமிழகத்தில் இருக்கும், தமிழகத்தை வைத்து பிழைக்கும் ஒரு நிறுவனத்தை தொடர்பு கொள்ள கூட ஹிந்தி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறதா’ என்று நெட்டிசன்கள் Zomato நிறுவனத்தை வறுத்தெடுக்க தொடங்கினர். டிவிட்டரில் ‘Reject Zomato’ என்ற ஹேஸ்டாக்கும் தேசம் முழுக்க ட்ரென்ட் ஆக அது Zomato நிறுவனத்தை பெரிதும் மட்டுப்படுத்தும் நிலைக்கு தள்ளியது. இதை உணர்ந்து கொண்ட தமிழக சார்பு Zomato நிறுவனம், கடைசியில் மன்னிப்பு கோரி, பேசிய அந்த எக்ஸ்கியூட்டிவையும் நீக்குவதாக உறுதி அளித்தது. மேலும் இது போல இனி தவறுகள் ஏதும் நடைபெறாது எனவும் உறுதி அளித்து பதிவினை இட்டது.
” ஒரே ஒரு ட்ரென்ட் மூலம் தேசத்தின் மிகப்பெரிய உணவு டெலிவரி நிறுவனத்தின் ஒரு எக்ஸ்கியூட்டிவ் செய்த தவறுக்காக அந்த நிறுவனத்தையே மன்னிப்பு கோர வைத்தது தான் இணையத்தின் மிகப்பெரிய பயனோ “