எளியவனின் வலியைக் கூறிய ‘பரியேறும் பெருமாள்’ திரைக்கு வந்து இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகிறது!
இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் திரைக்கு வந்து இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகிறது.
பா.ரஞ்சித் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில், கதிர், ஆனந்தி, யோகி பாபு மற்றும் பலர் நடித்து வெளிவந்த ‘பரியேறும் பெருமாள்’ என்னும் திரைப்படம் வெளி வந்து இன்றோடு மூன்று வருடம் ஆகிறது. எளிய மக்கள், தங்களின் வலியை திரையில் பார்த்ததாலேனோ இத்திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது.
’ஜோ’ அவள் பால் போன்ற தெளிந்த மனம் உடையவள். ஒரு சக மனிதனை சாதி, மதம், இனம் என்று பிரித்துப் பார்க்க தெரியாதவள். ஆனால் ஒரு சாதியவாதி புரிபவனுக்கு அவள் மகள், இன்னொரு பக்கம் ‘பரியன்’. விதியின் கீழ் ஏதோ ஒரு வயிற்றில் பிறக்கும் அவனை சுற்றி இருக்கும் ஒரு சில மனிதம் கீழ்த்தர மனிதமாக பார்க்கிறது அந்த ‘ஜோ’ என்னும் பூவைத்தவிர.
அந்த ’பூ’, அவளின் உலகம் கீழ்த்தரம் என்று ஒதுக்கும் அந்த பரியன் என்னும் மனிதத்தை, அவளையே அறியாமலே நேசிக்க துவங்குகிறது. அவள் வாழ்கின்ற அந்த குடும்பத்தின் மனிதமோ, அந்த சகமனிதத்தை ஈவு இரக்கம் இல்லாமல், தீண்ட தகாத ஒரு மனிதமாய் பார்த்து, பார்க்கும் இடமெல்லாம் அடித்து விரட்டுகிறது. அவளின் அந்த அளாவதிய காதலுக்கும், அவனை ஒடுக்கிப் பார்க்கின்ற அவளின் குடும்பத்தின் காட்டு மிராண்டி தனத்திற்கும் இடையில் இந்த பரியன் என்ன செய்கிறான் என்பதே இந்த கதை.
நான்கு வரிகளில் இந்த கதையைச் சொல்லி விடுவது எளிது. ஆனால் அதை திரையில், தான் உணர்ந்த வலியோடு காண்பித்திருப்பார் மாரி செல்வராஜ். அதுவே இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.
“ சாதியும், இனமும் மனித இனத்திற்கே விரோதமானது என்பதை ஒரு மெல்லிய காதலோடும், ஒரு வித அழுத்தத்தோடும் சொல்லி இருக்கும் மாரி செல்வராஜ் அவர்களின் ’பரியேறும் பெருமாள்’ இன்னும் எத்தனை யுகங்கள் கடந்தாலும், ஒரு போற்றுதலுக்குரிய ஒரு படைப்பாகவே இருக்கும் ”