தன் மேல் வைத்த கிண்டல், கேலிகளை சாதனையாக மாற்றி காவல் ஆய்வாளர் ஆகிறார் திருநங்கை சிவன்யா
பொதுவாகவே திருநங்கை என்றாலே அவர்கள் மீது பல்வேறு தரப்பினர் கேலி கிண்டல்களை புரிந்து அவர்களை அவமானப்படுத்துவது வழக்கமாகி வருகிறது. அவ்வாறு தன் மீது வைக்கப்பட்ட கேலி, கிண்டல்களை எல்லாம் சாதனைகளாக மாற்றி இருக்கிறார் திருவண்ணாமலையை சேர்ந்த திருநங்கை சிவன்யா.
திருவண்ணாமலை மாவட்டம் பாவுப்பட்டு கிராமத்தை சேர்ந்த திருநங்கை சிவன்யா(30), சமீபத்தில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் ஆணையம் நடத்திய காவல் ஆய்வாளர் தேர்வின் எல்லா படிநிலைகளிலும் வெற்றி பெற்றிருந்தார். இதன் மூலம் தலைமைச்செயலகத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பணிநியமன ஆணைகளுக்கான நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கைகளினால் தனக்கான பணிநியமன ஆணையை திருநங்கை சிவன்யா பெற்றுக்கொண்டார்.
இதன் மூலம் தமிழகத்தின் இரண்டாவது திருநங்கை காவல் ஆய்வாளராகிறார் திருநங்கை சிவன்யா. இதற்கு முன் 2017-இல் திருநங்கை பிரித்திகா யாஷினி தமிழகத்தின் முதல் திருநங்கை காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றிருந்தார். தற்போது சிவன்யாவும் அந்த வகையில் மூன்றாம் பாலினத்தை பெருமைப்படுத்துகிறார்.
“ கேலியோ கிண்டல்களோ அதை எப்படி உள்ளுக்குள் வைத்து ஒரு வெறியை உருவாக்கி அதிலிருந்து சாதனைகளை படைப்பது எப்படி என்று இது போன்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வோம் “