தன்னம்பிக்கை என்பதற்கு அர்த்தம் கேட்டால் ‘உசேன் போல்ட்’ என்ற ஒரு பெயரில் சொல்லி விடலாம்
உலக அரங்கு, ஸ்பிரின்ட் களம், ஒட்டு மொத்த போட்டியாளர்களும் சிறுத்தை வேகத்தில் ஓடுகின்ற ஒரு களம். ஆனால் அங்கு அந்த சிறுத்தைகளை எல்லாம் முந்திக் கொண்டு ஒரு மின்னல் சிரித்துக்கொண்டே இலக்கை அடைகிறது. அவர் தான் உசேன் போல்ட். எது தன்னம்பிக்கை என்றால் இலக்கிற்கு அருகில் சென்று திரும்பி பார்த்து தன் பின்னால் ஓடுபவர்களிடம் நான் தான் இலக்கை முதலில் அடைய போகிறேன் என்பதை தன் புன்னகையில் அவர்களுக்கு வெளிப்படுத்தும் அந்த சுபாவம் தான்.
ஆம் தன் திறமையின் மேல் முழு நம்பிக்கை உள்ள ஒருவரால் மட்டுமே இலக்கை அடைவதற்கு முன்னரே வெற்றியை தன் புன்னகையில் கொண்டாட முடியும். உசேன் ஒவ்வொரு முறையும் அவ்வாறே தன் வெற்றியைக் கொண்டாடுவார். அந்த தன்னம்பிக்கையே அவருக்கு எட்டு ஒலிம்பிக் தங்கம்,பதினொன்று உலக சாம்பியன்ஷிப் தங்கம் உட்பட 19 கின்னஸ் ரெக்கார்டுகளையும் பெற்றுக்கொடுத்துள்ளது.
100 மீட்டர் பிரிவில் 9.58 Sec, 200 மீட்டர் பிரிவில் 19.19 Sec என்று இவர் விட்டுச் சென்ற அந்த சாதனைகளை முறியடிக்க இன்றளவும் எந்த தடகள வீரராலும் முடியவில்லை. அதனால் தான் உசேன் போல்ட் என்னும் மனிதன் மின்னல் வேக மனிதன் என்று அழைக்கப்படுகிறார்.
“ தடகளம் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது உசேன் போல்ட். அந்த அளவுக்கு தன் பெயரை உலக அரங்கில் பதித்து சென்று விட்டார் அந்த மின்னல் வேக மனிதன் ”