இந்தியாவில் 63 கோடியை எட்டியிருக்கும் தடுப்பூசி உபயோகம்!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 65 லட்சத்திற்கும் மேலானோர் தடுப்பூசி எடுத்துக்கொண்டதன் மூலம் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் இந்தியாவில் 63 கோடியைக் கடந்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது.

தொடர்ந்து தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுகள் மக்களைச் சேர்ந்து வந்தாலும் முதல் தவணையின் போது வருகின்ற சின்ன சின்ன பக்க விளைவுகளான காய்ச்சல்,உடல் அசதி போன்றவைகளுக்கு பயந்து பெரும்பாலானோர் இரண்டாவது தவணை எடுத்துக்கொள்ள மறுக்கின்றனர். சாதாரண சின்ன சின்ன விளைவுகளுக்கு பயந்தால் பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை யாரும் உணருவதில்லை என்பது மருத்துவ வல்லுநர்களின் வேதனையாக இருக்கிறது.

ஓரு வேளை இப்போது இருக்கும் சூழல் மாறி தேசம் மறுபடியும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டால் இந்த முதல் தவணை தடுப்பூசி மட்டுமே உங்களை அந்த நெருக்கடி நிலையிலிருந்து காத்து விடும் என்று நினைப்பது மிகப்பெரிய தவறு. பொதுவாக ஒருவர் முதல் தவணை எடுத்துக்கொண்டு, இரண்டாவது தவணைக்கான தடுப்பூசி காலம் வரும்போது அவர் அச்சமயத்தில் அவருக்கான தடுப்பூசியை எடுத்துக்கொள்ளவில்லையெனில், அவர் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டதில் எந்த பயனும் இல்லை. முறையான கட்டுப்பாடுகளுடன் விதிக்கப்பட்ட காலநேரத்துடன் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் மட்டுமே அதன் செயல்திறன் உங்களை காக்கும்.

ஆதலால் தடுப்பூசிகளை பெயருக்கு எடுத்துக்கொள்ளாமல், முறையாக இரண்டு தவணையும் மருத்துவ வல்லுநர்களின் அறிவுரைப்படி காலம் தாழ்த்தாமல் எடுத்துக்கொண்டு உங்களின் எதிர்ப்பாற்றலை வைத்து இந்த கொரோனோவுக்கு எதிராக போரிடுங்கள். தடுப்பூசி தான் எடுத்துக்கொண்டு விட்டோமே என்று முக்கவசங்களை அணியாமலும் இருக்க வேண்டாம். நாம் தான் தினமும் எல்லா கொரோனோ கட்டுப்பாடுகளையும் முறையாக கையாளுகிறோமே என்று தடுப்பூசி எடுத்துக்கொள்ளாமலும் இருக்க வேண்டாம்.

“ முகக்கவசம் கேப்டன் அமெரிக்காவின் ஷில்டு போன்றது, தடுப்பூசி தோர் உபயோகித்திடும் சுத்தியல் போன்றது இரண்டையும் வைத்து தான் இந்த தானோசை (கொரோனோ) வீழ்த்த முடியும். ஆகவே ஏவெஞ்சர்களே முறையாக முகக்கவசம் அணிந்திடுங்கள் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளுங்கள் “

About Author