மீண்டு(ம்) வா! ஹாரிஸ் என்னும் இசையின் சகாப்தமே!
ஒரு படத்தில் 5 பாடல்கள் எனில், அந்த ஐந்துமே ஹிட் அடிப்பது என்பது இசையமைப்பாளனுக்கு என்றாவது ஒரு நாள் நடக்கும் அதிசயம். ஆனால் அந்த அதிசயத்தை அடிக்கடி நிகழ்த்திக் காட்டுகின்ற ஒரு இசையின் சகாப்தம் இருக்கிறது. அந்த சகாப்தத்தின் ராஜன் தான் ஹாரிஸ் ஜெயராஜ்.
இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் தொடக்க காலக்கட்டம். அங்கு ஏற்கனவே ஒரு புயல் பலமாக வீசிக் கொண்டு இருந்தது. அதுவும் அந்த புயலுக்கு எதிரே யாரும் நிற்க கூட முடியாத அளவிற்கு அந்த புயல் அதிபயங்கரமாக வீசிக் கொண்டு இருந்தது. ஆனால் ஒரு மெல்லிய இசை மட்டும் எந்த வித பயமும் இன்றி அந்த புயலுடன் போட்டி போட களம் இறங்கியது. ஆம் அவர் தான் ஹாரிஸ் ஜெயராஜ். அந்த புயல் தான் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான்.
கவுதம் மேனனின் ‘மின்னலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் ஹாரிஸ் ஜெயராஜ். பெரும்பாலும் அந்த காலக்கட்டத்தில் திரைப்பட பாடல்களை ஆடியோ கேசட்டுகள், ரேடியோ, FM, திருமண விழாக்கள், சடங்கு விழாக்கள் இது மாறி எதிலாவது ஒன்றில் தான் பெரும்பாலும் கேட்க முடியும். அப்போது ”மின்னலே’ படத்தின் பாடல்கள் எங்காவது கேட்கும் போது எல்லாம் மனது எங்களுக்குள்ளேயே அடித்துச் சொல்லிக் கொள்ளும் இது கண்டிப்பாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடலாகத்தான் இருக்கும் என்று.
பாடல் புக்குகளை, ஆடியோ கேசட்டுகளை திருப்பி, யார் இசையமைப்பாளர் என்று தேடி பார்க்கும் போது தான் தெரிந்தது அந்த இசையமைப்பாளனின் பெயர் ஹாரிஸ் என்பவர் என்று. முதல் படத்திலேயே அவரின் இசையின் கீழ் பல்வேறு இதயத்தை கவர்ந்தவர். மின்னலே படத்தின் இசைக்காக பிலிம்பேர் விருதும் வாங்கியவர். அதற்கு பின் வந்த மஜ்னு, 12 பி ஆல்பங்களும் மிகப்பெரிய ஹிட்.
அதுவரை மக்களால் ’மெலோடி கிங்’ என்று அழைத்து வரப்பட்ட ஹாரிஸ், தனக்கு தர லோக்கலா இறங்கி வேற மாறி குத்தவும் தெரியும் என்று ’கோவில்’ படத்திலும் ’சாமி’ படத்திலும் தன்னை நிரூபித்தார். அவர் இசையமைத்த ‘காதல் பண்ண தெம்பு இருக்கா… கைய பிடிக்க தெம்பு இருக்கா…’ என்னும் ’கோவில்’ படத்தின் பாடல் தான் முந்தி எல்லாம் எந்த பிரைவேட் பஸ்களில் ஏறினாலும் சுற்றிலும் ஸ்பீக்கர்களில் ஒலிக்கும். அதற்கு பின் ’சாமி’ படத்தில் அவர் இசையமைத்திருக்கும் பாடலான ‘ திருநெல்வேலி ஹல்வாடா… திருச்சி மலை கோட்டைடா…’ என்ற பாடலெல்லாம் அன்றைய சூழலில் ராவான ஹிட். அன்று தமிழகத்தின் தெற்கு பகுதிகளில் இந்த பாட்டுக்காகவே தியேட்டர் வாசலில் குவிந்தவர்கள் பலர்.
அதற்கு பின் ’காக்க காக்க’, ’அந்நியன்’, ‘கஜினி’, ’உன்னாலே உன்னாலே’, ’தாம் தூம்’, ’அயன்’, எங்கேயும் காதல்’, ‘துப்பாக்கி’, ’இரண்டாம் உலகம்’, ‘என்னை அறிந்தால்’, ’என்றென்றும் புன்னகை’, ‘அநேகன்’ என்று இவர் இசையமைத்த எல்லா படத்தின் ஆல்பங்களும் ஹிட். ஒரு ஆல்பத்தில் ஒரு பாடல், இரண்டு பாடல் ஹிட் கொடுத்தால் போதாதா, என்று நினைப்பவர்கள் மத்தியில் ஒரு ஆல்பத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி பெற வேண்டும் என்று அதுக்காகவே மெனக்கெட்டு உழைப்பவர் தான் ஹாரிஸ் ஜெயராஜ்.
இசையின் ரசிகனாக இருக்கும் எல்லோரின் இதயத்திலும் நிச்சயம் ‘ஹாரிஸ் ஜெயராஜ்’ என்னும் படைப்பாளிக்கு தனி இடம் இருக்கத் தான் செய்யும். இன்றும் கூட பலரின் செல்போன்களில் அவரின் முதல் படைப்பான ‘மின்னலே’ படத்தின் Flute BGM தான் ரிங்டோன் (BGM லிங்க் கீழே) என்றால் அந்த அளவிற்கு இசையை நமக்குள் மிகவும் நெருக்கமாக்கியவர் இசையின் சகாப்தமான ஹாரிஸ் ஜெயராஜ்.
“ கடைசியாக அவரின் இசையை தேவ், காப்பான் படங்களில் 2019 இல் கேட்டது. அதற்கு பின் இல்லை. யாவினிலும் மீண்டு, மீண்டும் வருவார் என்பதே இசையின் ரசிகர்களான எங்களது ஆத்ம நம்பிக்கை. மீண்டு(ம்) வாருங்கள் ஹாரிஸ் ஜெயராஜ் “