ஆனந்தம் | Re-View | ‘நம்முடைய குடும்பத்தை நாமே திரையில் பார்த்த அனுபவம் தான் இந்த ஆனந்தம்’
மம்மூட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி மற்றும் பலர் நடித்து 2001-யில் வெளியான ஆனந்தம் திரைப்படத்தை பற்றி இடம்பொருளின் Re-View-வில் காண்போம்.
ஓரு கூட்டு குடும்பம் அது சந்திக்கும் பிரச்சினைகள், அதை மூத்த மகனான திருப்பதி எப்படி சந்திக்கிறார் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பற்றிய கதை தான் இந்த ஆனந்தம். படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் உண்டு. ஆனால் இயக்குநர் லிங்குசாமி ஒவ்வொருவருக்கும் அதில் முக்கியத்துவம் கொடுத்து இருப்பார்.
குடும்ப படங்கள் என்றாலே நியாபகம் வருவது இயக்குநர் விக்ரமன் தான். ஆனால் இயக்குநர் லிங்குசாமி இந்த திரைப்படத்தில் குடும்பங்களையும் அதை சுற்றி வரும் பிரச்சினைகளையும், அக்குடும்பம் எப்படி கையாள்கிறது என்பதையும் அதி இயற்கையாக காண்பித்து இருப்பார். அதுவே இந்த திரைப்படத்தின் வெற்றி.
திருப்பதியாக மம்மூட்டி ஆகட்டும், மாதவனாக முரளி ஆகட்டும், கண்ணன் ஆக அப்பாஸ் ஆகட்டும் ஒவ்வொருவரும் நடிப்பில் நம்மை ஒவ்வொரு சீன்களில் அழ வைத்து விடுவார்கள். பொருளாதார பிரச்சினை, கூட்டு குடும்ப பிரச்சினை, காதல் பிரச்சினை என்று எல்லா பிரச்சினைகளையும் தாண்டி ஒரு குடும்பம் கூட்டு குடும்பமாகவே எப்படி நிற்கிறது என்பதை அழகாக காண்பித்து இருப்பார் இயக்குநர்.
எஸ் ஏ ராஜ்குமார் இசையில் இன்றும் இத்திரைப்படத்தின் பாடல்கள் எல்லா இடங்களிலும் ஒலித்து கொண்டு தான் இருக்கிறது. முக்கியமாக ’பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்’ என்ற பாடல் அன்றைய இளசுகளை மிகவும் சுண்டி இழுத்த பாடல். அது போக ‘ஆசை ஆசையாய் இருக்கிறதே, இது போல் வாழ்ந்திடவே’ என்ற பாடல் எல்லாம் இன்றளவும் பல திருமண விழாக்களில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது.
அந்த காலக்கட்டத்தில் எல்லாம் குடும்பங்களை தியேட்டருக்குள் இழுப்பது என்பது மிகவும் கடினம். லிங்கு சாமி அதை பெட்டராக அப்போதே செய்து இருந்தார். இந்த காலக்கட்டத்தில் இப்படியான படங்கள் வருவது மிகவும் அரிது. வந்தாலும் அது இன்றைய ரசிகர்களால் கொண்டாடப்படுமா என்பது சந்தேகம். ஆக மொத்தமாய் ’ஆனந்தம்’ 21 வருடங்களுக்கு முன்பும், 21 வருடங்களுக்கு பின்பும் ஆனந்தமாய் குடும்பங்களால் கொண்டாடப்படும் ஒரு தரமான திரைப்படம்.
” கடைசியில் அழ வைத்தால் நல்ல படம் என்று சொல்லி விடுவார்கள் என்று கிளைமேக்சில் மட்டும் உன்னத காட்சியை வைத்து தப்பித்துக் கொள்ளும் இன்றைய சினிமாவிற்கு இடையில் அன்றைய சினிமாக்கள் ஒரு உன்னத குருக்கள் என்றே சொல்லலாம் “