மங்காத்தா | Re-View | ‘விநாயக் மகாதேவ் என்னும் ஹீரோவின் ஆகச்சிறந்த வில்லனிசம் தான் இப்படம்’
கடந்த 2011-யில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த மங்காத்தா திரைப்படம் குறித்து இந்த Re-View வில் பார்க்கலாம்.
தயாநிதி அழகிரி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், நடிகர் அஜித்குமார், அர்ஜூன், திரிஷா, வைபவ், அஷ்வின், பிரேம்ஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் உருவாகி, கடந்த 2011 அன்று வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ஒரு திரைப்படம் தான் மங்காத்தா.
நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த ஒரு படம் என்றே சொல்லலாம். இயக்குநர் வெங்கட் பிரபு பொதுவாக கதையை எழுத்தாக எல்லாம் எழுதுவதில்லை என்ற ஒரு கருத்து உண்டு. ஆனால் இப்படத்தில் அப்படி ஒரு எழுத்து இருக்கும். திரைக்கதையும் அதற்கேற்றபடியான காட்சியமைப்பும் என வெங்கட்பிரபு ஒரு சிறப்பான இயக்குநர் என படத்தின் ஒவ்வொரு சீன்களிலும் தோன்றிக் கொண்டே இருக்கும்.
நடிகர் அஜித்குமார் அவர்களின் மாஸ் என்ட்ரி என்ன, அதற்கு பின்னால் யுவனின் ஆர்ப்பரிக்கும் பிஜிஎம் என்ன, நடிகர் அர்ஜூன் அவர்களின் தோரணையான நடிப்பு என்ன, சிறப்பான இன்டர்வெல், அஜித் அவர்களின் வில்லனிசம், ஹீரோயிசம் என படம் முழுக்க ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெசல் ட்ரீட் தான். அதிலும் படத்தை முதன் முதலில் தியேட்டரில் பார்த்தவர்களுக்கெல்லாம் படத்தின் கிளைமேக்ஸ் ட்விஸ்ட் நிச்சயம் வியக்க வைத்து இருக்கும்.
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் படம் முழுக்க வசீகரிப்பார் நடிகர் அஜித் குமார், ஒவ்வொரு மாஸ் சீன்களிலும் அதற்கு முன்னர் எந்த படத்திலும் இல்லாத ஒரு முகத்தை காட்டி இருப்பார் நடிகர் அஜித். வாலி திரைப்படத்திற்கு பிறகு ஒரு சிறந்த வில்லனிசம் காட்டி இருப்பார். அஜித் அவர்களுக்கு இணையாக அர்ஜூன் அவர்களும், நடிப்பிலும் மாஸ்சிலும் பொழந்து கட்டி இருப்பார். ஒரு 500 கோடி பணத்தை கொள்ளையடிக்க நினைக்கும் ஒரு கும்பல், அந்த கும்பலிடம் இருந்து அந்த 500 கோடியை தட்டி பறிக்கும் இருவர். அந்த இருவர் யார் என்ற ஒரு மூன்று லைன் கதை தான் என்றாலும் கூட வெங்கட் பிரபு அதை சுவாரஸ்யமாக நகர்த்திய விதம் தான் மங்காத்தாவின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
படத்தின் ஆகச்சிறந்த இன்னொரு தூணாக விளங்கியவர் யுவன் ஷங்கர் ராஜா, ஒவ்வொரு முறையும் பிஜிஎம் ஒலிக்கும் போதெல்லாம் அந்த பிஜிஎம்காகவே திரையரங்குகளில் எழுந்து நின்று குரல்வளை வலிக்க வலிக்க கத்திய ரசிகர்கள் பலர். பாட்டும் அனைத்துமே ஹிட் தான். படத்தில் இருந்து யுவனை எடுத்துப் பார்த்தால் நிச்சயம் யோசிக்க கூட முடியவில்லை. அந்த வகையில் மங்காத்தா ஒரு மிகப்பெரிய ஹிட்டாக உருவெடுத்ததற்கு யுவனின் பங்கும் மிக அதிகம்.
“ சின்ன சின்ன படங்களை ஜாலியாக எடுத்துக் கொண்டு இருந்த வெங்கட் பிரபு திடீரென வந்து ஒரு மங்காத்தா போல ஒரு மிகப்பெரிய ஹிட்டை கொடுப்பார் என்று ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை, ஒவ்வொரு அஜித் ரசிகர்களுக்கும் மங்காத்தா வாழ்வில் மறக்க முடியாத படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை “