Ghilli | Re-View | ‘ஒரு கமெர்சியல் திரைப்படத்திற்கான அத்துனை அம்சங்களும் நிறைந்த திரைப்படம்’
தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் தரணி அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி, கடந்த 2004 யில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ‘கில்லி’ திரைப்படம் குறித்து இந்த Re-View -வில் பார்க்கலாம்.
மதுரையை கலக்கும் ரவுடி முத்துப்பாண்டியாக பிரகாஷ் ராஜ், அவரின் மாமன் மகள் தனலெட்சுமியாக திரிஷா, மதுரையே கண்டு பயப்படும் ரவுடி முத்துப்பாண்டிக்கு, தனலெட்சுமியை திருமணம் செய்து கொள்ள விருப்பம். ஆனால் தனலெட்சுமிக்கும் அவரின் குடும்பத்திற்கும் அதில் துளி கூட விருப்பமில்லை. இதனால் தனலெட்சுமியின் சகோதரர்கள் தனலெட்சுமிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க, இது தெரிந்த முத்துப்பாண்டி தன்னுடைய விருப்பத்திற்கு இணங்க மறுக்கும் தனலெட்சுமியின் இரண்டு சகோதரர்களையும் தீர்த்துக் கட்டுகிறார்.
இந்த சமயத்தில் தான் சரவணவேலுவான விஜய் ஒரு கபடி விளையாட்டிற்காக மதுரை வருகிறார். அங்கு எதிர்பாராத விதமாக தனலெட்சுமியை நடுரோட்டில் இழுத்துச் செல்லும் முத்துப்பாண்டியை சந்திக்க நேரிடுகிறது. தனலெட்சுமி ஒரு பிரச்சினையில் இருப்பதை உணர்ந்து கொண்டு, முத்துப்பாண்டி யார் என்றே தெரியாமல் சரவண வேலு அவர் மீது கை வைத்து விடுகிறார். கை வைத்ததோடு மட்டுமல்லாமல் தனலெட்சுமியையும் காப்பாற்றும் நோக்கில் அவருடன் கூட்டிச் சென்று விடுகிறார்.
பரபரப்பான இடைவெளி, அதற்கு பின்னர் கதையில் என்ன நடந்தது, முத்துப்பாண்டி, சரவணவேலுவையும் தனலெட்சுமியையும் கண்டு பிடித்தாரா? தன்னை காப்பாற்றிய சரவணவேலுவின் மீது எதிர்பாராமல் காதல் கொள்ளும் தனலெட்சுமி, மீண்டும் சரவணவேலுவும் முத்துப்பாண்டியும் சந்திக்கும் அந்த புள்ளியில் என்ன நடக்கிறது, என பல திருப்பங்களுடன், கதை ஜெட் வேகத்தில் நகர்ந்து ஒரு புள்ளியில் திருப்திகரமாக முடிகிறது.
வில்லனாக பிரகாஷ் ராஜ் படத்திற்கு ஆகச்சிறந்த பிளஸ். ஒரு வில்லன் சரியாக அமைந்தால் தான் படத்தின் ஹீரோ, ஹீரோவாக தெரிவார். அந்த வகையில் பிரகாஷ் ராஜ் தன்னுடைய கேரக்டரை சிறப்பாக செய்து இருப்பார். நடிகர் விஜய் அவர்களும் தன்னுடைய அந்த சரவணவேலு என்ற கேரக்டருக்கு எவ்வளவு உயிர் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுத்து இருப்பார். இது போக வித்யாசாகர் அவர்களின் இசையும் படத்தின் வெற்றிக்கு ஆகச்சிறந்த அடித்தளம், அவரின் இசையில் பாடல்கள் அனைத்துமே ஹிட். கிட்டதட்ட 200 நாட்களுக்கு மேல் தமிழகத்தில் ஓடிய இத்திரைப்படம் கோலிவுட்டில் முதல் 50 கோடி திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
” நடிகர் விஜய் என்றால் பலரும் நியாபகம் வைத்துக் கொள்ளும் முதல் திரைப்படம் கில்லி தான். ஏன் என்றால் கில்லி என்ற ஒரு திரைப்படம் நடிகர் விஜய் அவர்களுக்கு அப்படி ஒரு திருப்புமுனை கொடுத்தது, கில்லி திரைப்படத்திற்காக இயக்குநர் முதலில் அணுகியது விக்ரம் தான் என்றாலும் கூட, விக்ரமே நடித்து இருந்தாலும் கூட இப்படம் கோலிவுட்டில் நடிகர் விஜய் ஏற்படுத்திய ஒரு இம்பேக்ட்டை நிச்சயம் கொடுத்து இருக்காது என்பதை ஏற்று தான் ஆக வேண்டும் “