அருணாச்சலம் | Re-View | ‘அன்றைய காலக்கட்டத்தில் தியேட்டர்களை திருவிழாக்கோலம் ஆக்கிய ஒரு திரைப்படம்’
அண்ணாமலை சினி கம்பைன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி அவர்களின் இயக்கத்தில், இசையமைப்பாளர் தேவா அவர்களின் இசையில், நடிகர் ரஜினிகாந்த், சவுந்தர்யா, மனோரமா, ரம்பா, ஜெய் ஷங்கர் மற்றும் பலரின் நடிப்பில் 1997 காலக்கட்டத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் அருணாச்சலம் குறித்து இந்த ரீ-வியூவில் பார்க்கலாம்.
கதைக்களம்
ஒரு கிராமத்தின் மிகப்பெரிய குடும்பத்தில், மூத்த மகனாக இருப்பவர் தான் அருணாச்சலம் (ரஜினி), கிராமத்தார்கள் கொடுக்கும் அத்துனை மரியாதையும், மதிப்பும் அருணாச்சலத்தையே சேருகிறது. ஒரு இக்கட்டான கட்டத்தில் அவர் அந்த குடும்பத்தைச் சாராதாவர் என்று தெரிய வருகிறது, அவர் அங்கு இருந்து அவமானப்படுத்தப்பட்டு அனுப்பப்படுகிறார். அங்கிருந்து சென்னை வரும் அருணாச்சலம் அங்கு அவரது அப்பா வேதாச்சலம் என்று தெரிந்து கொள்கிறார். வேதாச்சலம் பல பில்லியன் சொத்துக்களுக்கு சொந்தக்காரர், அவருக்கு ஒரே மகன் தான் அருணாச்சலம்.
பிரிந்து போன அருணாச்சாலத்தை பல வருடங்களாக தேடி வந்த வேதாச்சலம், உயிர் பிரிவதற்கு முன் ஒரு வீடியோ பதிவிட்டு இறந்து விடுகிறார். அந்த வீடியோவில் அவருக்கு 3000 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாகவும், ஆனால் அதை அருணாச்சலம் அனுபவிக்க விரும்பினால் 30 கோடியை 30 நாட்களில் செலவு செய்ய வேண்டும் என்று கூறி இருப்பார். அவ்வாறு செலவு செய்ய தவறினால் அந்த 3000 கோடியும் மக்கள் நலப் பணிக்காக ட்ரஸ்ட்க்கு சென்று விடும் என்கிறார் வேதாச்சலம்.
தன் அப்பா யார் என்று தெரிந்து கொண்ட அருணாச்சலம், சந்தோசத்தில் எனக்கு சொத்துக்களே வேண்டாம் எனக்கு என் அப்பா யார் தெரிந்ததே போதும் என்று முடிவெடுத்து விட்டு தன்னை அவமானப்படுத்தியவர்களிடம் தனது அப்பா யார் என்பதை சொல்ல கிளம்புகிறார், ஆனால் ஒரு கட்டத்தில் அந்த சொத்துக்களை ட்ரஸ்ட்க்கு செல்ல விடாமல் அபகரிக்க அதைச் சுற்றி பல நரிகள் சூழ்வதை புரிந்து கொண்டு அப்பா கொடுத்த அந்த சேலஞ்ஜை ஏற்றுக் கொள்கிறார். சொத்துக்களை அபகரிக்க நினைக்கும் கூட்டத்தின் நடுவே, அருணாச்சலம் அவரின் அப்பா கொடுத்த அந்த சேலஞ்சை சக்சஸ் ஆக முடித்தாரா, அவர் பிரிந்த அந்த கிராமத்து குடும்பத்துடன் மீண்டும் இணைந்தாரா என்பது தான் மீதிக்கதை!
ரீ – வியூ
அருணாச்சலமாக ரஜினி படம் முழுக்க மாஸ் காட்டி இருப்பார். படத்தில் ஏகப்பட்ட கேரக்டர்கள் இருந்தாலும் கூட, ஒவ்வொருவருக்கும் படத்தில் முக்கியத்துவம் இருக்கும். இயக்குநர் சுந்தர் சி படத்தின் ஒவ்வொரு கேரக்டர்களையும் அட்டகாசமாக வடிவமைத்து இருப்பார். இசையமைப்பாளர் தேவா அவர்களின் இசையில் பின்னனி இசையும், பாடல்களும் மெகா ஹிட். அருணாச்சலம் அத்துனை இடையூறுகளுக்கு மத்தியில் பணத்தை எப்படி செலவழிக்க போகிறார், அவர் அவரின் கிராமத்து குடும்பத்துடன் இணைந்தாரா என்ற கேள்விகளுக்கு பல எதிர்பார்ப்புகளுடன் கிளைமேக்சில் ரசிகர்களுக்கு விடை வைத்து இருப்பார் சுந்தர் சி.
பாக்ஸ் ஆபிஸ்
உலகளாவிய அளவில் மெகா ஹிட் அடித்த அருணாச்சலம் திரைப்படம், கிட்டதட்ட 175 நாட்கள் வெற்றிகரமாக ஓடியதாக கூறப்படுகிறது. உலகளாவிய அளவில் அருணாச்சலம் திரைப்படம் அப்போதே 35 கோடி வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது.
“ என்ன தான் இன்று விஜய், அஜித் என்று பல முன்னனி ஹீரோக்கள் வந்து இருந்தாலும் கூட அன்று ரஜினிகாந்த் அவர்கள் தனது படத்தின் மூலம் திரையரங்குகளில் ஏற்படுத்திய திருவிழாக் கோலங்களை இனி வரும் எந்த ஹீரோக்களாலும் மீண்டும் ஏற்படுத்தி விடமுடியாது என்பது தான் உண்மை “