பாட்ஷா | Re-View | ‘ஒரு படத்தின் ஒவ்வொரு துளியிலும் மாஸ் இருக்குமானால் அது தான் இப்படம்’
நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கும் சரி, ரஜினி ரசிகர்களுக்கும் சரி வாழ்க்கையில் மறக்க முடியாத படம் ஒன்று இருக்குமானால் அது நிச்சயம் பாட்ஷாவாக இருக்கும், அப்படத்தை கொஞ்சm ரீ கால் செய்து பார்ப்போம்.
சத்யா மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், இசையமைப்பாளர் தேவா அவர்களின் இசையில், நடிகர் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகி, 1995 காலக்கட்டங்களில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் பாட்ஷா.
மாணிக்கம், ஒரு சாதாரண ஆட்டோக்காரன், சின்ன சின்ன பிரச்சினைகளை கூட கண்டு ஒதுங்கி செல்கிற ஒரு பாமரன். அவனுக்கென்று ஒரு குடும்பம், ஒரு அமைதியான வாழ்க்கை. ஆனாலும் அவனுக்குள் ஒரு பழைய நெருப்பு ஒன்று புகைந்து கொண்டே இருக்கிறது. அது சமூகத்தில் இருப்பவர்களால் ஊதப்பட்டு கொண்டே இருக்கிறது. தொடர்ந்து ஊதப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரு இடத்தில் புகை பற்றி எரிந்து காட்டுத் தீயாய் கொழுந்து விட்டு எரிகிறது. அந்த இடத்தில் தான் ஆரம்பிக்கிறது மாணிக் பாட்ஷாவின் பிளாஸ் பேக்.
மாணிக்கம் மற்றும் பாட்ஷா இருவரின் நட்பிற்குள் வரும் ஆண்டனி கதாபாத்திரம், ஆண்டனியால் தன்னுடைய உயிர் நண்பனை இழக்கும் மாணிக்கம், இழப்பின் கோபமும், ஆத்திரமும் ஒரு சாதாரண மாணிக்கத்தை மாணிக் பாட்ஷாவாக மாற்றும் அந்த தருணம். அதற்கு பின்னர் மாணிக்பாட்ஷா வெர்சஸ் ஆண்டனி இடையில் நடக்கும் மோதல்கள், அப்பாவின் இழப்பிற்கு பின்னர் மாணிக்பாட்ஷா எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒதுங்கி வாழ முடிவு செய்தல். மீண்டும் ஒரு இக்ட்டான கட்டத்தில் மாணிக் பாட்ஷாவா மாறும் மாணிக்கம், கடைசியில் இந்த ஆண்டனி – மாணிக் பாட்ஷா இடையிலான மோதலில் யார் ஜெயித்தார்கள் என்பது தான் மீதிக் கதைக்களம்.
முதல் ஒரு 50 நிமிடங்கள் அமைதியாக செல்லும் கதைக்களம், அதற்கடுத்து ஒவ்வொரு சீன்களும் அனல் பறக்கும் மாஸ்கள் தான். அதிலும் மாணிக்கம் என்னும் சாதாரண ஆட்டோக்காரன், மாணிக் பாட்ஷாவாக மாறும் அந்த தருணம் தான் படத்தின் ஒட்டு மொத்த ஹைலைட், அங்கு எகிறும் அந்த படம் அதற்கு பின்னர் எகிறிக் கொண்டே தான் இருக்கும். ஒட்டு மொத்தமாக ரசிகர்களுக்கு எல்லாம் இப்படம் ஒரு மிகப்பெரிய ட்ரீட். கிட்ட தட்ட தியேட்டரில் மட்டும் 20 தடவைக்கும் மேல் இப்படத்தை பார்த்த ரசிகர்கள் உண்டு.
படத்தின் ஒவ்வொரு மாஸ்களுக்கும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா மாஸ் தூவி இருப்பது தேவா அவர்களின் இசை. அவரின் இசையமைப்பில் உருவான ’ஆட்டோ காரன் ஆட்டோ காரன்’ பாடல் தான் இன்றளவும் கூட தமிழகத்தில் ஆட்டோகாரர்களுக்கு தேசிய கீதம். இப்படம் வந்ததற்கு பிறகு பலரும் ஆட்டோவின் பின்னாடியில் பிரசவத்திற்கு இலவசம் என்று எழுதிய வரலாறும் உண்டு. இப்படத்தினால் ரஜினி ரசிகர்கள் ப்லரும் ஆட்டோகாரர்களாக மாறிய வரலாறும் உண்டு.
“ இன்றளவும் இப்படத்தை டிவியில் திரையிட்டாலும், தியேட்டரில் திரையிட்டாலும் அந்த மாஸ்சை அதே ரசனையோடு ரசிக்க அதே கூட்டம் இப்போதும் இருக்கும், அது தான் பாட்ஷாவின் உண்மையான வெற்றி, இப்படத்தை பல நடிகர்களும், பல பாணியில், பல்வேறு கதையில் எடுத்துப் பார்த்தனர், ஆனாலும் கூட பாட்ஷா ஏற்படுத்திய தாக்கத்தை யாராலும் கொடுக்கமுடியவில்லை, காரணம் ரஜினிகாந்த் ஒருவர் தான் “