Garudan | Review | ‘நடிகர் சூரிக்கு இரண்டாவது வெற்றி என்றே சொல்லி விடலாம்’
வெற்றிமாறன் அவர்களின் எழுத்தில், துரை செந்தில்குமார் அவர்களின் இயக்கத்தில், சூரி, சசிகுமார், உன்னிமுகுந்தன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கருடன்.
கதை என்னவோ நமக்கு பரிட்சயப்பட்டதாக இருந்தாலும் கூட, அதை நேர்த்தியாக திரையில் கொண்டு வந்த விதம் தான் பாராட்டுதலுக்கு உரியது. நேர்மைக்கும், பல வருட விசுவாசத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒருவன் அந்த சூழலை எப்படி எதிர்கொள்கிறான், கடைசியில் எதை தெரிவு செய்கிறான் என்ற ஒரு வரிக் கதையை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார் துரை செந்தில்குமார்.
ஆதியாக சசிகுமார், கர்ணாவாக உன்னி முகுந்தன், சொக்கனாக சூரி இந்த மூன்று கதாபாத்திரங்கள் தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள், கதாபாத்திரத்திற்கான ஒவ்வொரு நடிகர்கள் தேர்வுமே பொருத்தமாக இருந்தது என்று சொல்லலாம். விறு விறுப்பாக நகரும் கதைக்களத்தில் தேவையில்லாத காட்சிகளை சொறுவாமல் விறுவிறுப்பை கடைசி வரை கொண்டு சென்றது படத்திற்கு ப்ளஸ்.
சூரிக்கு ஹீரோவாக இரண்டாவது படம் என்றால் அது நம்பவே முடியவில்லை, ஆக்சன் காட்சிகளிலும் சரி, எமோசனல் காட்சிகளிலும் சரி செம்மையாக ஸ்கோர் செய்கிறார். ஏதோ 50 படங்களை நடித்து விட்டு 51 ஆவது படம் நடிப்பது போல பல முக்கிய ஷாட்களை ஒரே ஷாட்களில் முடித்தாராம் சூரி. டையலாக் டெலிவரி, காட்சிகளுக்கு ஏத்தாற்போல உடல் அசைவுகள் என சூரி நடிப்பில் பின்னி பெடலெடுக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னனி இசை படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. ஒட்டு மொத்தமாக பார்த்தால் நடிகர் சூரிக்கு இரண்டாவது வெற்றி என்றே சொல்லி விடலாம்.
“ ஹீரோ ஆகி விட்டோம், வரிசையாக படங்களை அள்ளி போடுவோம் என முடிவெடுக்காமல், இவ்வாறு கதையை சரியாக தெரிவு செய்து நடிப்பது என்பது நடிகர் சூரியை நிச்சயம் இன்னும் ஒரு உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை “