Gunaa | Re-View | ‘மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது’

Guna Movie Re View In Tamil Idamporul

Guna Movie Re View In Tamil Idamporul

இயக்குநர் சந்தான பாரதி அவர்களின் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன், ரோஷினி, ரேகா, ஜனகராஜ் மற்றும் பலரின் நடிப்பில் 1991-யில் தீபாவளி ரிலீஸ் ஆக வெளியான திரைப்படம் தான் குணா.

ஏன் குணா அப்போது ஆதிக்கம் செலுத்தவில்லை?

1991 காலக்கட்டத்தில் திரையரங்குகளில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே காலக்கட்டத்தில் ரிலீஸ் ஆகிறது. ஒன்று நடிகர் ரஜினிகாந்த் – மணிரத்னம் இணைவில் உருவான ‘தளபதி’ திரைப்படம், இன்னொன்று நடிகர் கமல்ஹாசன் – சந்தான பாரதி இணைவில் உருவான ‘குணா’ திரைப்படம். ’தளபதி’ திரைப்படம் கமெர்சியலாக ஆதிக்கம் செலுத்தியதால், ‘குணா’ என்னும் திரைப்படம் அந்த காலக்கட்டத்தில் பெரிதாக பேசப்படவில்லை. ஆனாலும் சினிமா வட்டாரத்திற்குள் ‘குணா’ திரைப்படம் பெரிதளவில் பேசப்பட்டது.

’குணா’ திரைப்படத்தை தேடி தேடிப் பார்க்கும் ரசிகர்கள்

தற்போது ’மஞ்சும்மேல் பாய்ஸ்’ என்னும் மலையாள திரைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த படத்தில் ‘குணா’ திரைப்படத்தின் பாடல் ஒன்று பயன்படுத்தப்பட்டு இருப்பதால், அந்த படத்தோடு சேர்ந்து மீண்டும் ‘குணா’ திரைப்படம் குறித்தும் ரசிகர்கள் பேச ஆரம்பித்து இருக்கின்றனர். அதுவும் அந்த காலக்கட்டத்தில் பேசப்படாத அளவிற்கு தற்போது ‘குணா’ திரைப்படம் குறித்து ரசிகர்கள் அதிகம் கலந்துரையாடி வருகின்றனர். அந்த படம் குறித்தே அறியாத பலரும் அப்படத்தை இணையதளங்களில் தேடி படத்தை பார்த்து விட்டு, இப்படி ஒரு படத்தை இத்துனை நாள் பார்க்காமல் விட்டு விட்டோமே என ரசிகர்கள் லேட் ரீவ்யூ எல்லாம் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

சரி ’குணா’ திரைப்படத்தின் கதை தான் என்ன?

’குணா’ என்னும் ஒரு மனநலம் பாதித்த ஒரு இளைஞன், அவனுக்கு என்று ஒரு கனவு தேவதை இருக்கிறாள், அவள் பெயர் அபிராமி, ஒரு முறை கோவிலில் தான் கனவு தேவதையாக மனதில் வைத்து இருக்கும் அந்த பெண்ணை குணா நேரில் பார்க்க நேரிடுகிறது. அவளையே அபிராமியாக குணா பாவிக்கிறான். அவளை கடத்தி ஒரு மலைக்குகைக்கு கொண்டு செல்கிறான். அதற்கு பின்னர் அவனுக்கும் அந்த அபிராமிக்கும் நேரும் பிரச்சினைகள் என்ன? அந்த பிரச்சினைகளை இருவரும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது தான் கதைக்களம்.

ஒரு தேவதைக்கும், ஒரு குழந்தையான முரடனுக்கும் இடையில் உருவாகும் அந்த காதல் ‘குணா’ திரைப்படத்தில் ஒரு முழு நீளக் கவிதையாக இருக்கும். ஒரு பக்கம் கமல்ஹாசனை கதாபாத்திரமாகவே படம் முழுக்க பார்க்க முடியும். இன்னொரு பக்கம் அபிராமியாக வரும் ரோஷினியின் நடிப்பும் கமல்ஹாசனுக்கு இணையாக இருக்கும். இளையராஜாவின் இசை படத்திற்கு ஒரு ஆகச்சிறந்த அடித்தளம். ’கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே….’ என்ற பாடல் எல்லாம் இன்றளவும் கவிஞர் வாலி அவர்களின் சிறந்த எழுத்தாக பார்க்கப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு சிறந்த நடிப்பிற்காக பிலிம்பேர் விருது வாங்கி கொடுத்த திரைப்படம் குணா என்பது குறிப்பிடத்தக்கது.

’குணா’ குகை

குணா திரைப்படம் வெளியானதில் இருந்து அப்படத்தின் படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்பட்ட அந்த குகை இன்றளவும் குணா குகை என்றே அழைக்கப்படுகிறது. இப்படத்திற்கு பின்னர் ஒரு சுற்றுலாத் தலமாகவும் அக்குகை மாறியது. ஆனால் பல மர்மமான மரணங்களும், மாயங்களும் அக்குகையில் நிகழ்ந்ததால் தற்போது அந்த குகை ஒரு தடை செய்யப்பட்ட பகுதியாக மாறி இருக்கிறது.

“ குணா என்னும் ஆகச்சிறந்த படைப்பை இன்றைய சினிமா உலகிற்கும், இன்றைய சினிமா ரசிகர்களுக்கும், வெளிக்கொணர்ந்த ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ டீமிற்கு சினிமா ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர் “

About Author