Indian | Re-View | ‘கமெர்சியலாகவும் இருக்க வேண்டும், அதே சமயத்தில் கருத்தும் இருக்க வேண்டும் என்றால் அது ஷங்கர் தான்’
இயக்குநர் ஷங்கர் அவர்களின் திரைக்கதையில், சுஜாதா அவ்ர்களின் எழுத்தில், ஏ ஆர் ரஹ்மான் அவர்களின் இசையில், நடிகர் கமல் ஹாசன், மனிஷா கொய்ரலா, சுகன்யா, கஸ்தூரி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி, 1996 காலக்கட்டத்தில் வெளியாகி சமூகத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை கொடுத்த திரைப்படம் தான் இந்தியன்.
பொதுவாகவே ஷங்கர் ஒரு படத்தை எப்படி அணுகுவார் என்றால், படம் கமெர்சியலாக அனைவரையும் போய் சேர வேண்டும் அதே சமயத்தில் படத்தில் கருத்தும் இருக்க வேண்டும், பிரம்மாண்டமும் இருக்க வேண்டும் என்ற மூன்று அம்சங்களை மனதில் வைத்து தான் ஒவ்வொரு படமும் எடுப்பார். அந்த மூன்றையும் இந்தியன் க்ளிக் செய்தது என்று சொன்னால் மிகையாகாது.
சேனாதிபதி, சந்துரு என இரு வேடங்களில் கமல்ஹாசன், ஐஸ்வர்யாவாக மனிஷா கொய்ரலா, அமிர்த வள்ளியாக சுகன்யா, சேனாதிபதி ஒரு விடுதலைப் போராட்ட வீரர், அநியாயங்களுக்கும், இலஞ்ச லாவண்யங்களுக்கும் எதிரானவர். விடுதலைப் போராட்டத்தில் சுபாஸ் சந்திர போஸ் குழுவுடன் இணைந்து எடுத்த கத்தியை விடுதலைக்கு பின்னும் வைக்க முடியாமல் சமூகத்தில் ஒரு போராளியாக மறைந்து வாழ்பவர்.
படம் மொத்தம் மூன்று கட்டங்களாக நகரும், அது ஒன்று நடப்பு கால நிகழ்வியல், இரண்டாவது சேனாதிபதியின் விடுதலைப் போராட்ட வரலாறு, மூன்று கஸ்தூரியின் ப்ளாஸ்பேக். ஷங்கரின் ஆகச்சிறந்த இயக்கமே இந்த மூன்றையும் ஒரு கோர்வையாக கனெக்ட் செய்தது தான். படத்தின் ஒவ்வொரு சீன்களையும் ஷங்கர் செதுக்கி இருப்பார். சுஜாதாவின் டையலாக்குகள் படத்தை தூக்கி நிறுத்தும். ஏ ஆர் ரஹ்மானின் இசை, அதை இசை என்று சொல்லாமல் படத்தின் பில்லர் என்றே சொல்லலாம்.
விடுதலைப் போராட்டம் முடிவடைந்து விடும், சேனாதிபதி வருவாரா, இல்லை நாட்டிற்காக உயிர் நீத்து இருப்பாரா என்ற கேள்விகளுடன் அமிர்த வள்ளியின் காதல் காத்து இருக்கும். சேனாதிபதி அமிர்தவள்ளியை தேடி அவர் முன் வந்து நிற்கும் போது ஒரு மெல்லிய இசை அப்படியே மெல்ல பரவும், அந்த ஒரு சீனிற்காவும் இசைக்காகவுமே படத்திற்காக கொடுத்த காசு சரியாக போச்சு என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு சீன்களிலும் அதற்கான பின்னனி இசையிலும் நேர்த்தி இருக்கும்.
படத்தின் ஒரு உச்சக்கட்ட இடம், இலஞ்ச வாவண்யங்களுக்கு எதிரான சேனாதிபதியின் மகன் சந்துருவே, இலஞ்சங்களுக்கு உட்படும் போது, அது சேனாதிபதிக்கு தெரியவரும் போது, ஒரு அப்பாவாக சேனாதிபதி நிற்பாரா, இல்லை சேனாதிபதியாகவே நிற்பாரா என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும் இடத்தை படத்தின் கிளைமேக்ஸ் ஆக வைத்து இருப்பார் ஷங்கர். மகனை கொல்லும் தருணங்களில் சேனாதிபதியாகவும், தந்தையாகவும் நிற்கின்ற கமல்ஹாசனின் நடிப்பு அப்பப்பா வேறு எந்த கலைஞனாலும் அந்த காட்சிக்கும் நியாயம் கொடுத்து விட முடியாது. ஒட்டு மொத்தமாக இந்தியன் சமூகத்தின் அழுக்குகளை நிமிர்ந்து பேசிய திரைப்படம்.
“ இந்தியன் 2 திரைப்படமும் தற்போது ரிலீஸ்க்கு ரெட் ஆக இருக்கும் நிலையில், இந்தியன் திரைப்படம் கொடுத்த ஒரு அழுத்தத்தை இந்தியன் 2 திரைப்படமும் கொடுக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும், நம்பிக்கை வைப்போம் இயக்குநர் ஷங்கரின் மேஜிக்கில் “