பிரியமான தோழி | Re-View | ‘ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பின் இலக்கணம்’
இயக்குநர் விக்ரமன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் மாதவன், ஜோதிகா, ஸ்ரீ தேவி விஜயகுமார், வினீத், மணி வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2003-யில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் பிரியமான தோழி.
பொதுவாகவே இயக்குநர் விக்ரமன் திரைப்படம் என்றாலே மக்களிடம் எளிதாக சென்று சேரும் வகையில் வலுவான ஒரு எமோசன்ஸ் இருக்கும். அந்த வகையில் பிரியமான தோழி திரைப்படத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பை விக்ரமன் கதைக்களமாக எடுத்து இருப்பார்.
அசோக் ஆக மாதவன், ஒரு கிரிக்கெட் வீரராக ஆக துடிக்கும் ஒரு சாதாரண இளைஞன், ஜூலியாக ஸ்ரீ தேவி விஜயகுமார், ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணி புரிபவர். இவர்கள் இருவருக்கும் இடையிலான ஒரு உன்னத நட்பு, அந்த நட்பினை சமூகம் பார்க்கும் விதம், அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நட்பிற்காக அசோக் செய்யும் தியாகங்கள், இறுதியில் அசோக் கிரிக்கெட் வீரராக ஆனாரா, இருவரின் நட்பும் சமூகத்தின் பிரச்சினைகளை எப்படி கையாண்டது என்பது தான் ப்டம்.
விக்ரமன் அவருக்கே உரிய பாணியில் ஒட்டு மொத்த கதைக்களத்தையும் அதற்கேற்ற காட்சிதனையும் சுவாரஸ்யமாக நகர்த்தி இருப்பார். படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நடிப்பும் அருமையாக இருக்கும். சிறிது சீன்களே வந்தாலும் ஜூலியின் அப்பாவாக மணிவண்ணன் அருமையாக நடித்து இருப்பார். எஸ் ஏ ராஜ்குமார் அவர்களின் இசையில் பாடல்கள் அனைத்துமே ஹிட். காதல் கதைக்களத்தை மட்டுமே தெரிந்து நடித்த நடிகர் மாதவன் அவர்களுக்கு இத்திரைப்படம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்து இருக்கும்.
“ அந்த காலக்கட்டத்தில் இப்படத்தை பார்த்து விட்டு, ஜோதிகா மாதிரி நமக்கு ஒரு காதலி கிடைத்து விடாதா என இளைஞர்கள் ஏங்கியதை காட்டிலும் ஜூலி மாதிரி நமக்கு ஒரு நட்பு கிடைத்து விடாதா என ஏங்கிய இளைஞர்கள் தான் அதிகம், அந்த அளவிற்கு இப்படம் ஆண் – பெண் நட்பிற்கு வலுசேர்த்தது “