Karnan | Re-View | ‘நட்பிற்காக, கொடுத்த வாக்கிற்காக உயிரையும் கொடுக்க துணிபவன் தான் கர்ணன்’
இயக்குநர் பி ஆர் பந்தலு அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிவாஜி, என் டி ராமாராவ், சாவித்திரி, அசோகன், தேவிகா மற்றும் பலரின் நடிப்பில் 1964 காலக்கட்டத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் கர்ணன்.
பாண்டவர்களுக்கு எல்லாம் மூத்தவனான கர்ணன், காலச் சூழலால், நட்பின் மீது கொண்ட மரியாதையால் ஒரு கட்டத்தில் போரில் தங்கள் தம்பிகளையே எதிர்கொள்ள வேண்டிய நிலை வருகிறது. ஆகப்பெரும் வீரனாக அறியப்படும் கர்ணன், கொடை வள்ளல், நேர்மையின் சிகரம் என்றெல்லாம் அறியப்பட்டாலும் கூட, அதர்மத்தின் பக்கம் நின்ற காரணத்தால், விதி அவனை பலவிதமாக தண்டிக்கிறது.
போரில் கர்ணன் என்ன ஆகிறான்?, அவர் எப்படி பல விதமாக சூழ்ச்சிகளில் சிக்கிக் கொண்டு போர்க்களத்தில் நிர்க்கதியாக நிற்கிறார்?. பாண்டவர்களுக்காக தர்மத்தின் பக்கம் நின்று கிருஷ்ணர் செய்யும் சூழ்ச்சிகள் என்ன என்ன? என்பது தான் மீதிக்கதை. கர்ணனாக சிவாஜியை தேர்வு செய்ததிலேயே படம் பாதி வென்று விட்டது என்று சொல்லலாம். படம் முழுக்க அவர் கர்ணனாக காட்டிய கம்பீரம், கர்ணனையே நேரில் பார்த்து விட்டது போல இருக்கும்.
விஸ்வநாதன் – ராமமூர்த்தி கூட்டணியில் உருவான அத்துனை பாடல்களுமே ஹிட் தான். அதிலும் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது…..’ என கிளைமேக்ஸ்சில் வருகின்ற அந்த ஒரு பாடலுக்கு அன்று தியேட்டர்களில் கண்ணீர் சிந்திய ரசிகர்கள் ஏராளம். மகாபாரதத்தை தழுவி எடுப்பட்ட இத்திரைப்படம் அந்த காலக்கட்டத்திலேயே நூறு நாட்களுக்கு மேல் ஓடிய வரலாறு உண்டு.
“ மொத்தத்தில் கர்ணனே நேரடியாக வந்து நடித்துக் கொடுத்தாலும் கூட, அப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்க முடியாது, சிவாஜி கணேசன் அப்படி ஒரு நடிப்பை ப்டம் முழுக்க வெளிப்படுத்தி இருப்பார், படத்தின் 90 சதவிகித வெற்றிக்கான காரணத்தை நடிகர் சிவாஜியின் தலையில் கட்டி விடலாம் என்பதில் ஐயமில்லை “