உன்னை நினைத்து | Re-View | ’ஒரு ஆண், தனக்கு துரோகங்கள் செய்த காதலுக்கு கூட எதையும் செய்ய துணிவான்’
இயக்குநர் விக்ரமன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூர்யா, லைலா, சினேகா, ரமேஷ் கண்ணா மற்றும் பலரின் நடிப்பில் கடந்த 2002-யில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படமான ‘உன்னை நினைத்து’ குறித்து இந்த Re-View வில் பார்க்கலாம்.
ஒரு சிறிய லாட்ஜில் வரவேற்பாளராக வேலை செய்யும் சூர்யா, அதே லாட்ஜின் அருகில் குடியிருக்கும் நிர்மலா (லைலா) குடும்பம். சூர்யாவிற்கு நிர்மலாவின் மீது காதல். நிர்மலாவின் குடும்பம் ஏழ்மையால் திளைத்துக் கொண்டு இருக்கும் போது சூர்யா பல்வேறு வழிகளில் அவருக்கு உதவியாக இருந்து வருகிறார். இதனால் நிர்மலாவின் குடும்பத்திற்கு சூர்யாவை பிடித்து போக காதலுக்கு சம்மதம் என்று வெளிப்படையாக சொல்லாமல் இலைமறை காயாக சம்மதம் சொல்வர்.
இந்த நிலையில் சூர்யா ஒரு வேளையாக சில நாட்கள் சொந்த ஊருக்கு சென்று விட, சூர்யாவின் இடத்தை சூர்யாவின் நண்பர் செல்வம் நிரப்பி விடுவார். செல்வமும் நிர்மலாவிற்கு ஆசைப்பட்டு அவரின் குடும்பத்திற்கு சூர்யாவை விட அதிகமாக வாரி இறைப்பார். உதாரணத்திற்கு சூர்யா நிர்மலாவின் குடும்பத்திற்கு வீட்டு வாடகை கொடுத்தால் செல்வம் அவர்களுக்கு வீடே கட்டிக் கொடுப்பார். இதனை கருத்தில் கொண்டு நிர்மலாவும் அவரது குடும்பத்தினரும் செல்வம் பக்கம் சாய்ந்து விடுவர். சூர்யாவை யாரோ போல ஒதுக்கி விடுவர். சூர்யாவும் நிர்மலாவின் சிந்தனை மற்றும் தனது நிலைமையை புரிந்து கொண்டு அப்படியே விலகிவிடுவார்.
அதற்கு பின்னர் லாட்ஜின் மேனேஜராக ஒரு குடும்பம் வருகிறது. அதில் ஒருவர் ராதா. அந்த ராதா (சினேகா) அதே லாட்ஜில் பணிபுரியும் சூர்யாவின் நடவடிக்கைகள் பிடித்து போய் அவரின் மீது காதல் கொள்கிறார். சூர்யா திடீரென்று மீண்டும் நிர்மலாவை சந்திக்க நேரிடுகிறது. அங்கு அவர் செல்வத்தால் ஏமாற்றப்பட்டு நிற்கும் நிலையை அறிகிறார். நிர்மலா தனது கனவுகளை எல்லாம் இழந்து நிர்கதியாய் இருப்பதை உணர்ந்து அவரின் கனவுகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கிறார். தான் ஏமாற்றி சென்ற போதும் கூட தனக்காக இப்படி எல்லாம் செய்கிறாரே என்று நிர்மலாவிற்கு மீண்டும் சூர்யா மீது காதல் வருகிறது.
நிர்மலாவின் காதலை சூர்யா ஏற்கிறாரா? நிர்மலா, ராதா இருவருக்கும் இடையில் நிற்கும் சூர்யா, யாரின் காதலை ஏற்க போகிறார் என்பது தான் கிளைமேக்ஸ். ஆர் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்துமே ஹிட். விக்ரமனின் கதைக்களமும் கதைக்கேற்ற காட்சி அமைப்பும் நேர்த்தியாக இருக்கும். அந்த காலக்கட்டத்தில் திரையரங்கு சென்ற பார்த்தவர்களுக்கு எல்லாம் ஒரு பீல் குட் படமாக அமைந்தது இப்படம்.
“ ஒரு ஆண் தான் தோற்றுப்போன, தனக்கு துரோகங்கள் செய்த காதலுக்கு கூட எதையும் செய்ய துணிவான் என்பது தான் கதையின் கரு. விக்ரமன் அந்த கருவை எழுத்தாக்கிய விதம் தான் படத்தின் ஆகப்பெரும் வெற்றிக்கு காரணம் “