வானத்தை போல | Re-View | ‘இன்றளவும் டிவியில் பார்த்தால் மனதுக்குள் ஒரு பூரிப்பை கொடுக்கின்ற ஒரு படம்’

Vanathai Pola Re View Idamporul

Vanathai Pola Re View Idamporul

விக்ரமன் இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த், லிவிங்ஸ்டன், பிரபு தேவா, மீனா உள்ளிட்டோர் நடித்து 2000 காலக்கட்டங்களில் வெளியாகி இருந்த ’வானத்தை போல’ திரைப்படத்தை பற்றி நமது Re-View வில் காணலாம்.

விஜயகாந்த் என்றாலே ஆக்சன் என்றிருந்த காலம் அது. ஆனால் போற போக்கில் விக்ரமனுடன் ஒரு தத்ரூபமான ஒரு குடும்ப படத்தை கொடுத்து அதற்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தார் விஜயகாந்த். தற்போதெல்லாம் 3 மணி நேரத்திற்கு கதை எழுதுங்கள் என்றால் பெரும்பாலும் டைரக்டர்கள் சொதப்புகின்றனர். ஆனால் இயக்குநர் விக்ரமனின் படைப்பு, ரசிகர்களை 3 மணி நேரத்திற்கு திரையரங்குகளில் உட்கார வைத்து படத்தோடு ஒன்றிய ஒரு படையலை போடும்.

’வானத்தை போல’ திரைப்படமும் ரசிகர்களுக்கு விக்ரமன் அவர்களால் கொடுக்கப்பட்ட ஒரு ஆகச்சிறந்த படையல் தான். எமோசன்ஸ் இருக்கும், காதல் இருக்கும், குடும்ப ஒன்றுதல்கள் இருக்கும், காமெடிகள் இருக்கும், எழுச்சிகரமான சீன்கள் இருக்கும், ஒரு கல்யாண வீட்டிற்கு சென்றால் இலை முழுக்க எப்படி சாதம், கூட்டு, பொரியல்களால் நிரம்பி இருக்குமோ அப்படியே விக்ரமன் படமும். ஒட்டு மொத்தமும் இருக்கும். திரையரங்கின் உள்ளே சென்றால் ரசிகர்களுக்கு ஒரு சினிமா விருந்து தான்.

தம்பிகளை மடியில் படுக்க வைத்துக் கொண்டு மழைக்கு தான் கூரையாக அமையும் சீனில் ஆரம்பிக்கிறது திரைப்படம் அங்கு நிமிறும் அதற்கு பின்னர் ஒவ்வொரு சீனிலும் படம் தொடர்ந்து நிமிர்ந்து கொண்டே தான் இருக்கும். தன் அண்ணனை கைது செய்வதற்காக லிவிங்ஸ்டன் போலீஸ் உடையில் வந்து விட்டு உங்களை கைது செய்து தான் நான் என்னை போலிஸ்சாக நிரூபிக்க வேண்டுமெனில் அந்த வேலையே எனக்கு தேவை இல்லை என்று சொல்லும் போது பேக்கிரவுண்டில் ஒரு பிஜிஎம் ஓடும் பாருங்கள் சீன் அழ வைக்கிறதோ இல்லையோ எஸ். ஏ. ராஜ்குமார் அவர்களின் அந்த இசை நம்மை அழ வைத்து விடும்.

ராசி இல்லாதவள் என்று தன்னை தானே நினைத்துக் கொள்ளும் மருமகளை வெள்ளைச்சாமி ஆகிய விஜயகாந்த் கையாளும் விதம், காதல் வெண்ணிலா என்ற ஒரு பாட்டின் மூலம் தன் காதலை மீனா அவர்களிடம் வெளிப்படுத்தும் முத்து என்ற இன்னொரு விஜயகாந்த், பிரபு தேவாவின் குறும்புகள், கவுரியாக மீனாவின் நடிப்பு, ரமேஷ் கண்ணா, செந்தில் அவர்களின் காமெடி என்று ஒரு சீன் கூட படத்தில் போர் அடிக்காமல் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து வைத்து இருப்பார் விக்ரமன்.

அதிலும் மீனாவிற்காக வீட்டில் ஆனந்த் என்ற ஒரு பணக்கார மாப்பிள்ளையை பார்த்து வைத்து இருப்பார்கள். அவர் விஜய்காந்த் (முத்து) அவரிடம் குறும்பு செய்யும் நோக்கில் ஒரு பிடி மண்ணை அள்ளி கையில் கொடுத்து விட்டு இதை எண்ணி என்னிடம் சொல் என்று நக்கலாக சொல்லுவார். விஜயகாந்த் ஆகிய முத்துவும் அதை சிறு நிமிடம் நோக்கி விட்டு ஆம் இத்தனை லட்சம் மண் இருக்கிறது. உங்களுக்கு சந்தேகம் என்றால் நீங்களும் எண்ணிக் கொள்ளுங்கள் என்று ஆனந்தின் மூக்கை உடைத்து விட்டு செல்லும் சீன்களுக்கு எல்லாம் தியேட்டர்களின் கைதட்டல்கள் உரைத்தது.

படம் முழுக்க அத்துனை பேரிடமும் தேர்ச்சியான நடிப்பை பார்க்க முடியும். மென்மையான திரைப்படம். குடும்பங்களோடு திரையரங்குகளில் அனைவரும் சென்று கொண்டாடிய ஒரு திரைப்படம். காலம் தாழ்ந்திருந்தால் என்ன, நிச்சயம் இப்படிப்பட்ட ஒரு உன்னத படைப்பை மக்களிடம் கொடுத்து சென்ற இயக்குநர் விக்ரமன் அவர்களுக்கும் நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கும் தற்போது சொல்லிக் கொள்கிறோம் ஒரு பெரும் நன்றியை .

“ இது போன்ற படம் முழுக்க என்கேஜ் செய்கிற குடும்ப கதைக்களத்தை எல்லாம் தற்போது பார்க்கவே முடிவதில்லை. மீண்டும் விக்ரமன் வந்தால் மட்டுமே அப்படி ஒரு படைப்பு சாத்தியமோ என்னவோ தெரியவில்லை “

About Author