Vetri Kodi Kattu | Re-View | ‘வெளிநாடு மோகத்தை, அதனை வைத்து நடந்த பல மோசடிகளை கட்டவிழ்த்த படம்’
இயக்குநர் சேரன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் முரளி, பார்த்திபன், மீனா, மாளவிகா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி, 2000 காலக்கட்டத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ஒரு திரைப்படம் தான் வெற்றி கொடி கட்டு.
படத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள், சேகராக முரளி, முத்து ராமன் ஆக பார்த்திபன், தமிழகத்தின் வெவ்வேறு நிலப்பரப்பை சார்ந்த இருவரும் தனது குடும்ப சூழல் வறுமை காரணமாக வெளிநாடு செல்ல முயற்சிக்கும் ஒரு குறிக்கோளால், ஒன்று இணைகின்றனர். கையில் இருந்த காசு, நிலம், நகைகளை விற்று, அடகு வைத்து பணம் புரட்டி ஏஜென்சியிடம் கொடுத்து விட்டு விசாவிற்காக காத்து இருக்கின்றனர்.
பணத்தை வாங்கி விட்டு ஏஜென்சி எகிறி குதிக்கவே, பணத்தை கொடுத்த அனைவரும் வீதியில் நிற்கின்றனர். அங்கு தான் அந்த புள்ளியில் தான் இந்த சேகரும், முத்துவும் சந்திக்கின்றனர். வீட்டிற்கு சென்றால் பணத்தை இழந்த சோகத்தில் வீட்டில் இருப்பவர்கள் என்ன ஆவார்கள் என்று யோசித்து இருவரும் மாறி, சேகர் முத்துவின் வீட்டிற்கும், முத்து, சேகரின் வீட்டிற்கும் செல்கின்றனர்.
அதற்கு பின் என்ன நடந்தது, ஏமாற்றி சென்ற ஏஜென்சியை கண்டு பிடித்தார்களா, இருவரின் குடும்பத்திற்கும் சேகரும், முத்துவும் ஏமாற்றப்பட்டது தெரிந்ததா என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தான் படம், விறு விறுப்பாக நகரும் கதைக்களத்தை ஒரு நல்ல கருத்துடன் முடித்து வைத்து இருப்பார் இயக்குநர் சேரன். முரளி, பார்த்திபன் இருவரும் போட்டி போட்டு படத்தில் நடித்துக் கொடுத்து இருப்பர், தேவா அவர்களின் இசையில், பாடலும் பின்னனி இசையும் படம் முழுக்க மிளிரும். கிட்ட தட்ட 3 மணி நேரம் ஓடும் படம் என்றாலும் கூட போரடிக்காமல் ஆடியன்ஸை சீட்டில் உட்கார வைக்கும்.
“ என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில் என்ற ஒரு வரி தான் படத்தின் மையக்கரு, அந்த மையக்கருத்தை எழுத்தாக்கி படமாக்க, சேரன் கையாண்ட விதம் தான் படத்தின் ஆகச்சிறந்த வெற்றிக்கு வழி வகுத்தது. அந்த காலக்கட்டத்தில் வெளிநாட்டு மோகம் கொண்ட பல இளைஞர்களை இந்த படம் திருத்தியது என்று சொன்னால் மிகையாகாது “