விளம்பரம், வீடியோ பார்த்தால் தினசரி 2500 ரூபாய் வருமானமா? இதில் மறைந்து இருக்கும் உண்மை தான் என்ன?

Ads Video Revenue Scam Fact Here Idamporul

Ads Video Revenue Scam Fact Here Idamporul

விளம்பரம் பார்த்தால் நீங்கள் சம்பாதிக்கலாம், வீடியோ தினசரி பார்த்தால் நீங்கள் சம்பாதிக்கலாம் என்று தற்போதெல்லாம் ஆன்லைனில் நிறைய பார்க்க முடிகிறது இதன் பின்னால் மறைந்து இருக்கும் உண்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

முதலில் இந்த ஸ்கீம் இலவசமாகவே ஆரம்பிக்கிறது. இதற்கென ஒரு ஆப் அல்லது வெப்சைட் வைத்து இருக்கிறார்கள். இலவசமாக விளம்பரம் அல்லது வீடியோ பார்க்கும் போது அந்த ஆப் அல்லது வெப்சைட்டில் இருக்கும் Wallet-யில் தினசரி 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கிரெடிட் செய்கிறார்கள். ஒரு 100 ரூபாய் 150 ரூபாய் Wallet-யில் சேரும் போது நாம் யாரின் கீழ் இந்த ஸ்கீம் சேர்ந்தோமோ அவர் நமது Wallet-யில் சேர்ந்த அந்த ரூபாயை நமது அக்கவுண்டில் போட்டு விடுகிறார்.

சரி தினசரி 5 ரூபாய் முதல் 10 ரூபாய் சம்பாதிக்க மட்டும் இந்த இலவச ஸ்கீம் வழங்கப்படுகிறது. இதற்கு மேல் சம்பாதிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?இதற்கு மேல் சம்பாதிக்க வேண்டும் எனில் அதற்கு ஒரு ஸ்கீம் வைத்து இருக்கிறார்கள். 2500 ரூபாய் கட்டினால் தினசரி 20-50 ரூபாய், 25,000 கட்டினால் தினசரி 100 ரூபாய், 50,000 கட்டினால் தினசரி 500 ரூபாய், 1,00,000 கட்டினால் தினசரி 1,000 முதல் 1,500 ரூபாய் என தினசரி விளம்பரம் வீடியோ பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க முடியும் என கூறுகின்றனர். இந்த Payment, One Time Payment மட்டுமே என்றும் கூறுகின்றனர்.

சரி, One Time Payment தானே ஒரே முறை கட்டி விட்டு, வீடியோ பார்த்தால் போதும் மாதம் 45,000 வரை சம்பாதிக்கலாமே என்னும் ஆர்வத்தில் பலரும் 1,00,000 வரை தொகையை எந்த கேள்வியுமின்றி கட்டி விடுகின்றனர். ஆனால் அதற்கு பின் தான் அந்த நிறுவனத்தினர் ஒரு ட்விஸ்ட் வைக்கிறார்கள், உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் இந்த ஸ்கீமை விளம்பரப்படுத்தி அவர்களையும் இதில் இணையுங்கள் அதன் மூலமும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற முடியும் என்கின்றனர். ஒரு சிலர் தங்கள் நண்பர்களிடமும், சொந்தங்களிடமும் பேசி தானும் சம்பாதித்து வருவதாக கூறி அவர்களையும் இணைத்து விட்டு, அவர்களையும் ஒரு இலட்சம் வரை கட்ட வைத்து விடுகின்றனர்.

இதில் சேர்ந்த அனைவருக்கும் மாதம் மாதம் வீடியோ பார்ப்பதினால் அவர்களுக்குரிய ரூபாய் கிடைக்கிறதா என்றால் ஆம் கிடைக்கிறது. ஆனால் எப்படி கிடைக்கிறது என்று ஆழமாக யோசித்தால் ஒருவர் ஸ்கீமில் சேரும் போது அவர் கட்டும் தொகையின் சிறு பங்கை இன்னொருவருக்கு வருமானமாக பகிர்கின்றனர். இன்னொருவர் கட்டும் தொகையின் பிறிதொரு சிறுபங்கை இன்னொருவருக்கு வருமானமென பகிர்கின்றனர். அதாவது ஒவ்வொருவரும் கட்டும் தொகையை மாற்றி மாற்றி இன்னொருவருக்கு சம்பளம் போல் போட்டு விட்டுக் கொண்டு இருக்கின்றனர். இதில் இணைந்து இருப்பவர்களும் நாம் வீடியோ பார்ப்பதனால் தானே நமக்கு வருமானம் வந்து கொண்டு இருக்கிறது என நினைத்து, தான் ஆட்டு மந்தையில் இணைந்ததை உணராமல் தன்னை சார்ந்தவர்களையும் அந்த மந்தைக்குள் மொத்தமாக இழுத்துப்போட்டு விடுகின்றனர்.

இதில் அதீத லாபம் அடைவது அந்த நிறுவனம் மட்டுமே, என்றாவது ஒரு நாள் இந்த ஒருவர் பணத்தை இன்னொருவரிடம் மாற்றி மாற்றி கொடுக்கும் Cycle மொத்தமாக உடையும். அவ்வாறு உடையும் போது நிறுவனத்தின் கீழ் இருக்கும் அனைவரும் நிறுவனத்தால் கலட்டி விடப்படுவர். இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், இதில் இணைந்த யாரிடமாவது நீங்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள், உங்களை வைத்து பலரும் ஏமாறிக் கொண்டு இருக்கிறார்கள் என்று கூறினால் அதை ஏற்றுக் கொள்ளாமல் அவர்கள் இணைந்த நிறுவனத்தின் புகழ் பாட துவங்குவது மட்டுமல்லாமல் நம்மையும் போதா குறைக்கு வார்த்தைகளால் வஞ்சித்து விடுவர். அது தான் அந்த நிறுவனத்தின் ஆகச்சிறந்த பலமும் கூட, அதாவது சிறு புழுவை இரையாக்கி திமிங்கலத்தை பிடிக்கிறது நிறுவனம். அதில் புழுக்களாக அவர்களுக்கு இரையாகி கொண்டே இருப்பது நாமும் நம்மை சார்ந்தவர்களும்.

“ எல்லோரும் இதில் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று தான், பணம் அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்து விடாது. அதற்கு உழைப்பு வேண்டும், உழைப்பின் வருமானத்தை பன்மடங்குகளாக பெருக்க ஐடியாக்கள் வேண்டும், இதை தவிர சம்பாதிக்க எந்த வழியும் இல்லை என்பது மட்டுமே உண்மை, வீணாக எந்த தூண்டிலிலும் புழுவாக சிக்காதீர்கள் அவ்வளவு தான்“

About Author