ஒரே மாதத்தில் 32,000 பேர் வேலை இழப்பு, ஐ.டி நிறுவனங்களுக்கு என்ன தான் ஆயிற்று?
கூகுள், அமேசான், மெட்டா உள்ளிட்ட முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 32,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடந்த ஒரிரு வருடங்களாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வழக்கமான பணி நீக்க நடைமுறைகளை காட்டிலும் 40 சதவிகிதத்திற்கு அதிகமாக, வேலையில் இருப்பவர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இதற்கான காரணங்கள் என்ன என்று ஆராய்ந்த போது முக்கியமாக ஒரு மூன்று காரணங்களே உலகளாவிய அளவில் கூறப்படுகிறது.
1) வரி அதிகரிப்பு / அதீத இலாப நோக்கம்
பெரும்பாலான நாடுகள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியை பார்த்து விட்டு அதன் மீது விதித்த அதீத வரி விதிப்பால், நிறுவனங்களின் இலாப சதவிகிதம் வெகுவாக சரிந்தது. மீண்டும் தங்களது இலாப சதவிகிதத்தை நிலைநாட்ட நினைத்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஒரே ஐடியாவாக ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்தது. இன்னும் ஒரு சில நிறுவனங்கள் அதீத இலாப நோக்கத்திற்காகவும் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்ததாக கூறப்படுகிறது.
2) கொரோனோ ஏற்படுத்திய விளைவு
கொரோனோ சூழலின் போது நிற்காமல் இயங்கிய ஒரே நிறுவனம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தான், ஆதலால் அந்த சூழலில் நிறுவனங்களுக்கு அதீதமாக ஆட்கள் தேவைப்பட்டதால் வளைத்து வளைத்து அனைத்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் தேவைக்கு அதிகமாக ஆட்களை நிரப்பியது. ஆனால் கொரோனோ காலக்கட்டம் முடிந்ததும் ஆட்களின் தேவையானது வெகுவாக குறைந்து போனது. அதுவும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
3) செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)
தற்போதைய சூழலில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் மீது செயற்கை நுண்ணறிவு பெரும் ஆதிக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 10 பேர் ஒரு நிறுவனத்தில் முக்கி முக்கி செய்யும் வேலையை ஒரே ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் செய்து விட முடியும் என்கிறார் எலான் மஸ்க். இந்த செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கமும் நிறுவனங்களின் ஆட்குறைப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது. AI -க்கு நிகராக அப்டேட் ஆகாதவர்களும், AI -யின் நுட்பம் அறியாதவர்களுக்கும் இனி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் இடம் இல்லை என்கின்றனர் ஒரு சில முன்னனி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள்.
“ தினம் தினம் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும் ஆண்ட்ராய்டு ஆஃப்களை போல, தகவல் தொழில் நுட்ப ஊழியர்களும் தங்களை தினம் தினம் அப்டேட் செய்து கொள்வது அவசியம் ஆகிறது. அவ்வாறு அப்டேட் செய்து கொள்பவர்கள் மட்டுமே இனி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் நீடிக்க இயலும் என தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர் “